மங்களூருவில் பொதுமக்களிடம் மந்திரி தினேஷ் குண்டுராவ் குறைகளை கேட்டறிந்தார்


மங்களூருவில்  பொதுமக்களிடம் மந்திரி தினேஷ் குண்டுராவ் குறைகளை கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் நேற்று ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் மந்திரிதினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மங்களூரு-

மங்களூருவில் நேற்று ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரியான தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

ஜனதா தரிசனம் நிகழ்ச்சி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் ஹாலில் நேற்று ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியுமான தினேஷ் குண்டுராவ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான ஆட்சி, மக்கள் பாராட்டும் வகையில் நடந்து வருகிறது. முதல்-மந்திரி சித்தராமையா நேரடியாக அவரே பொதுமக்களிடம் குறைகளை கேட்க விருப்பப்படுவார். ஆனால் பணிச்சுமை காரணமாகவும், முதல்-மந்திரியை காணவேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து பெங்களூருவுக்கு வந்து மக்கள் காத்து கிடப்பதாலும் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தலைமையில் ஜனதா தரிசனம் நிகழ்ச்சியை நடத்த சித்தராமையா உத்தரவிட்டார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அதன்பேரில் அந்தந்த மாவட்டங்களில், மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தலைமையில் ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. மந்திரிகளே நேரடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள். மங்களூருவில் நான் இன்று(நேற்று) இந்த நிகழ்ச்சியை தொடங்கி உள்ளேன். தட்சிண கன்னடா மாவட்ட மக்கள் என்னை நேரடியாக சந்தித்து புகார் அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருவேளை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், அந்த புகார் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த துறை அதிகாரிகள் உடனடியாக அதன் மீது தீர்வு காண்பார்கள்.

மனுக்களை பெற்று கொண்டார்

பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் காண வேண்டும்.

இவ்வாறு மந்திரி தினேஷ் குண்டுராவ் பேசினார்.

பின்னர் அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன், மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story