திருப்பதி: ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார் மந்திரி ரோஜா


வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவியை திருப்பதியில் மந்திரி ரோஜா வழங்கினார்.

திருப்பதி:

முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செயல்படுத்தி வருகிறார். அதன்படி ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறார். அந்த நிதி அவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கு வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்ட நிகழ்ச்சியை ேநற்று முதல்-மந்திரி விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைத்தார். அந்தத் திட்ட தொடக்க நிகழ்ச்சி திருப்பதியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கினார். மந்திரி ஆர்.கே.ரோஜா பங்கேற்று ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார்.

அவர் பேசியதாவது:-

ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு நலத்திட்ட நிதி உதவிக்காக முதல்-மந்திரி ரூ.262 கோடி டெபாசிட் செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் நாங்கள் இங்கே பார்த்தோம்.

திருப்பதி மாவட்டத்தில் ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு வாகன காப்பீடு மற்றும் பழுதுப் பார்ப்பு செலவுக்காக மாநில அரசின் நிதி உதவியாக மொத்தம் ரூ.11 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரம் காசோலையாக வழங்கப்பட்டது. ஆட்டோ, கார் டிரைவர்களின் கஷ்டங்களை உணர்ந்து முதல்-மந்திரி செய்து வருகிறார். அவருக்கு, பொதுமக்கள் தங்களின் ஆதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதே முதல்-மந்திரியின் நோக்கம் ஆகும்.

திருப்பதி மாவட்டத்தில் ஏற்கனவே 8 ஆயிரத்து 803 பயனாளிகளும், புதிதாக விண்ணப்பித்தவர்களான 2 ஆயிரத்து 789 பயனாளிகளும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 ஆயிரத்து 592 பயனாளிகள் வாகன மித்ரா திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் குருமூர்த்தி எம்.பி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஷ்வர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு பயனாளியின் ஆட்டோவை மந்திரி ஆர்.கே.ரோஜா ஓட்டிச் சென்றார்.

1 More update

Next Story