எங்கள் ஆட்சியை விமர்சிக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை; மந்திரி ஆர்.அசோக் பேட்டி


எங்கள் ஆட்சியை விமர்சிக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை; மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x

எங்கள் ஆட்சியை விமர்சிக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை என்று மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

பெங்களூரு:

எங்கள் ஆட்சியை விமர்சிக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை என்று மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மதவாத பிரச்சினைகள்

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருப்பதால் தான் மதவாத பிரச்சினைகள் கட்டுக்குள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் என்ன நடந்தது. அப்போது நடந்த சம்பவங்களை மூடி மறைத்தனர். இப்போது எங்கள் அரசு மீது குறை கூறுவது சரியல்ல. எதிர்க்கட்சிகள் எங்கள் அரசை விமர்சிக்கும் முன்பு யோசிக்க வேண்டும். சித்தராமையா ஆட்சியில் இருந்தபோது சிவாஜிநகரில் பட்டப்பகலில் கொலை நடந்தது. அப்போது என்ன நடவடிக்கை எடுத்தனர். பி.எப்.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் மீது போடப்பட்டு இருந்த வழக்குகளை காங்கிரஸ் ஆட்சியில் வாபஸ் பெற்றனர். எங்கள் ஆட்சியை விமர்சிக்க காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொலையாளிகளை கைது செய்ய பல மாதங்கள் ஆனது. ஆனால் நாங்கள் 24 மணி நேரத்தில் தவறு செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.

உரிய தண்டனை

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்வோம். அவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம். மல்லிகார்ஜுன கார்கே போலீஸ் மந்திரியாக இருந்தபோது, தலித் மக்கள் சிலர் எரித்து கொல்லப்பட்டனர். அப்போது காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்-ஒழுங்கை சரிசெய்துள்ளோம். மாநிலத்தில் எங்கும் மதக்கலவரங்கள் நடக்கவில்லை. கொலையாளிகளை என்கவுண்ட்டர் மூலம் கொல்ல வேண்டும் என்று சிலர் ஆவேசமாக கூறியுள்ளனர். அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story