அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்த எம்.எல்.சி. கவிதா; வரும் 20-ந்தேதி ஆஜராக புதிதாக சம்மன்
அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராகாமல் எம்.எல்.சி. கவிதா தவிர்த்த நிலையில், வரும் 20-ந்தேதி ஆஜராக புதிதாக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவிடம், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் 8 மணி நேரம் நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், சிசோடியாவை இரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை அனுமதி அளித்தும், பின்னர் 2-வது முறையாக 6-ந்தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது. இந்நிலையில், சிசோடியாவுக்கு 20-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அவர் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை கடந்த 9-ந்தேதி நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது. எனினும், அவரது வேண்டுகோளுக்கு ஏற்ப, விசாரணை 11-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி கோர்ட்டில் அமலாக்க துறை தாக்கல் செய்த காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சரத் ரெட்டி, கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மிக்கு கவிதா லஞ்சம் கொடுத்து உள்ளார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு உள்ளது.
இதேபோன்று, இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ந்தேதி சி.பி.ஐ. 7 பேர் மீது தனது முதல் குற்றப்பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது. தொடர்ந்து கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்தது. இதன்படி, ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்துக்கு, டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதில்களை பெற்று பதிவு செய்தனர். இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. இந்த விசாரணையையொட்டி கவிதா வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்க துறை உத்தரவின் பேரில் எம்.எல்.சி. கவிதா கடந்த 11-ந்தேதி காலை 11 மணியளவில் நேரில் ஆஜரானார். ஏறக்குறைய அமலாக்க துறை 9 மணிநேரம் அவரிடம் விசாரண நடத்தி, கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டது.
இதன்பின்பு அவர் தனது வாகனத்தில் இரவில் விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை பணமோசடி வழக்கில், வருகிற 16-ந்தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று கவிதாவுக்கு அமலாக்க துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
எனினும், அவர் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்து விட்டார். அதற்கு பதிலாக தனது கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதிநிதியாக அனுப்பி உள்ளார். அவர், கவிதாவின் வங்கி கணக்கு விவரம், தனிப்பட்ட மற்றும் வர்த்தக விவரங்கள் அடங்கிய 6 பக்க விளக்க கடிதம் ஒன்றை விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பித்து உள்ளார்.
கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாக்கும்படியும் மற்றும் அமலாக்க துறையின் சம்மன்களுக்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் கவிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வருகிற 24-ந்தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஒப்புதல் அளித்தது.
இதனால், இந்த விசாரணையில் அவர் நேரில் ஆஜராகவில்லை. தவிரவும், அவர் அமலாக்க துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சம்மனின்படி, தனிப்பட்ட முறையில் தான் நேரில் ஆஜராவதற்கான அவசியம் இல்லை என்றும் அதனால், தனது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை அனுப்பி இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த விசாரணை தெளிவாக, சுதந்திர முறையில் அல்லது வெளிப்படை தன்மையுடன் நடைபெறவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராகாமல் எம்.எல்.சி. கவிதா தவிர்த்த நிலையில், வரும் 20-ந்தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு அமலாக்க துறையினர் புதிதாக சம்மன் அனுப்பி உள்ளனர்.