கோர்ட்டுகளில் 5 கோடி வழக்குகள் தேக்கம்; நிலுவை வழக்குகளை தீர்ப்பதில் நீதித்துறைக்கு முழு ஆதரவு - மத்திய சட்ட மந்திரி


கோர்ட்டுகளில் 5 கோடி வழக்குகள் தேக்கம்; நிலுவை வழக்குகளை தீர்ப்பதில் நீதித்துறைக்கு முழு ஆதரவு - மத்திய சட்ட மந்திரி
x

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் நீதித்துறைக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாக மத்திய சட்ட மந்திரி கூறினார்.

மக்களுக்கு கடமை

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் குருஷேத்ரா பல்கலைக்கழக வளாகத்தில் பாரதீய வக்கீல்கள் அமைப்பின் 16-வது தேசிய மாநாடு தொடங்கியது. அதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது:-

நீதிபதிகள் மக்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டுமே தவிர அரசாங்கத்துக்கு அல்ல. எங்களை பொறுத்தவரை நீதிபதிகள் நாட்டுக்கு கடமைப்பட்டு இருக்க வேண்டும். சில கட்சிகளை பொறுத்தவரை தங்கள் கட்சி தலைவருக்கு நீதிபதிகள் கடமைப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

வழக்குகள் தீர்வு

நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் 5 கோடிக்கு மேற்பட்ட வழக்குகள் தேங்கி உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் நீதித்துறைக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கிறது.

கொரோனா காலத்தில் கூட கோர்ட்டுகள் இயங்க வேண்டும் என்பதற்காக கோர்ட்டுகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தோம். அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் நடப்பதாக அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் வதந்தி பரப்பி வருகிறார்கள். சில பத்திரிகைகள் நீதித்துறையின் அதிகாரத்தை மத்திய அரசு கைப்பற்ற முயற்சிப்பதாக சொல்கின்றன.

பிரதமர் மோடி பிரதமர் ஆனதில் இருந்து நாட்டை வழிநடத்துவதில் அரசியல் சட்டம்தான் புனித நூலாக விளங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story