மோகாமா இடைத்தேர்தல்: ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி


மோகாமா இடைத்தேர்தல்:  ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி
x

மோகாமா இடைத்தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி 16,741 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.புதுடெல்லி,


நாட்டில் காலியாக இருந்த அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது.

இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி தொடக்க சுற்று வாக்கு எண்ணிக்கை முதல், தொடர்ந்து முன்னிலை வகித்தபடியே காணப்பட்டார்.

அவர் 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவின்போது, 22,756 ஓட்டுகள் பெற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த வேட்பாளர் சோனம் தேவி 15,032 ஓட்டுகளையே பெற்றார். வாக்கு வித்தியாசம் 7 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இதனால், ஏறக்குறைய நீலம் தேவி வெற்றி பெறுவது உறுதியாகி இருந்தது.

இதுபற்றி நீலம் தேவி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, எனது வெற்றி முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்டது. எனக்கு போட்டியாக யாரும் இல்லை என நான் முன்பே கூறி விட்டேன். தேர்தல் வெறும் ஒரு சட்ட விதிமுறைக்காகத்தான் நடக்கிறது. மோகாமா தொகுதி பரசுராமின் நிலம்.

இந்த மக்களை ஏமாற்ற முடியாது. ஆனந்த் சிங் மக்களுக்கு சேவையாற்றி உள்ளார். அதற்கான முடிவை மக்கள் தற்போது தந்துள்ளனர் என கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் ஆயுத சட்ட வழக்கில் குற்றவாளி என சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காலியான அந்த தொகுதிக்கான போட்டியில் அவரது மனைவியான நீலம் தேவியை ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தேர்தலில் நிறுத்தி இருந்தது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிக வாக்குகளை பெற்று 16,741 வாக்குகள் வித்தியாசத்தில் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார். நீலம் தேவி 79,744 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சோனம் தேவி 63,003 வாக்குகள் பெற்றுள்ளார்.

பீகாரில் 3 மாதங்களுக்கு முன் மகாகத்பந்தன் என்ற பெயரிலான கூட்டணி அரசு, ஆட்சி அமைத்த பின்னர் மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இந்த இடைத்தேர்தல் ஆகும்.


Next Story