கர்நாடக கலைஞர்கள் சங்க தலைவர் மீது நடிகை ராணி பாலியல் புகார்


கர்நாடக கலைஞர்கள் சங்க தலைவர் மீது நடிகை ராணி பாலியல் புகார்
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:45 PM GMT)

கர்நாடக கலைஞர்கள் சங்க தலைவர், பொது செயலாளர் மீது நடிகை ராணி பாலியல் புகார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக கலைஞர்கள் சங்க தலைவர், பொது செயலாளர் மீது நடிகை ராணி பாலியல் புகார் கூறியுள்ளார்.

கர்நாடக புரவலர்கள் கலைஞர்கள் சங்கம்

கர்நாடகத்தில் உள்ள சின்னத்திரை மற்றும் திரைத்துறையில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் பிற பிரிவு கலைஞர்களுக்காக கர்நாடக புரவலர்கள் கலைஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக இருந்து வருபவர் டிங்கிரி நாகராஜ்.

பொது செயலாளராக இருந்து வருபவர் ஆடுகோடி சீனிவாஸ். இந்த சங்கத்தின் துணை தலைவியாக நடிகை ராணி இருந்து வருகிறார். இவர் கன்னட சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகைகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடவடிக்கைகள் சரியில்லை

கர்நாடக புரவலர்கள் கலைஞர்கள் சங்கத்தில் சின்னத்திரை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், டப்பிங் கலைஞர்கள் என திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் உள்ள பல்வேறு பிரிவு கலைஞர்கள் உறுப்பினராக இருந்து வருகிறோம். நான் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. நான் சங்க தேர்தலில் போட்டியிட்டு தற்போது துணை தலைவியாக இருந்து வருகிறேன்.

இந்த சங்கத்தில் கணக்கு வழக்குகள் சரியாக இல்லை. சங்கத்தின் பணம் கையாடல் செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சங்க தலைவர் டிங்கிரி நாகராஜ், பொது செயலாளர் ஆடுகோடி சீனிவாஸ் ஆகியோரின் நடவடிக்கைகள் சரியில்லை.

ஆபாச வீடியோக்கள்

அவர்கள் சங்கத்தில் உள்ள பெண் உறுப்பினர்களை அவமரியாதையாக பேசுகிறார்கள். அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். சில நேரங்களில் செல்போன்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்புகிறார்கள். இதுதொடர்பாக ஒருமுறை பிரச்சினை கூட ஏற்பட்டது.

ஆனால் அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். இதுபற்றி நான் கேட்டபோது என்னை 'ராஜினாமா செய்துவிட்டு செல்' என்று கூறுகிறார்கள். இதற்கெல்லாம் நியாயம் கிடைக்க வேண்டும். இல்லையேல் இப்பிரச்சினைக்காக நான் போராட்டம் நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மானநஷ்ட வழக்கு

நடிகை ராணி, கலைஞர்கள் சங்க தலைவர் மற்றும் பொது செயலாளர் மீது பாலியல் புகார் கூறிய விவகாரம் கர்நாடக திரைஉலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த டிங்கிரி நாகராஜ், 'நடிகை ராணி கூறிய அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகும். அவர் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடருவேன்' என்று கூறினார்.


Next Story