மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; 2 வாலிபர்கள் சாவு


மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; 2 வாலிபர்கள் சாவு
x

எச்.டி.கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

மைசூரு:

எச்.டி.கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தச்சு தொழிலாளி

மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகா அனுமந்த நகரை சேர்ந்தவர் சோமசேகர் (வயது30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். சோமசேகர், நாகேஷ் ஆகிய 2 பேரும் எச்.டி.கோட்டையில் உள்ள மரக்கடையில் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். வேலைக்கு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை சோமசேகர், நாகேஷ் ஆகிய 2 பேரும் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் மாலை அவர்களுக்கு பணிமுடிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சம்பள தொகையை கடையின் உரிமையாளரிடம் கேட்டனர். அப்போது அவர் வீட்டிற்கு சென்று எடுத்து விட்டு வருவதாக அவர்களிடம் கூறினார்.

சம்பள தொகை

பின்னர் அங்கிருந்து கடையின் உரிமையாளர் அவரது வீட்டிற்கு சென்றார். அனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் நாகேஷ் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு கடையின் உரிமையாளர் நாளைக்கு வந்து சம்பள தொகையை 2 பேரும் வாங்கி கொள்ளுங்கள் என கூறினார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். கத்திகே கிராமம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

2 பேர் சாவு

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் நாகேஷ், சோமசேகர் ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கத்திகே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் 2 பேர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எச்.டி.கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கத்திகே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story