ம.பி.: 20 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி பொற்காலம்; சாதனைகளை பட்டியலிட்ட அமித்ஷா


ம.பி.:  20 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி பொற்காலம்; சாதனைகளை பட்டியலிட்ட அமித்ஷா
x

மத்திய பிரதேசத்தின் கடந்த 20 ஆண்டு கால பா.ஜ.க.வின் ஆட்சியை பொற்காலம் என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

போபால்,

நடப்பு ஆண்டில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்த திட்டங்களை காங்கிரஸ் கட்சி நிறுத்தியது என குற்றச்சாட்டாக கூறினார்.

தொடர்ந்து அவர், காங்கிரசின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரான கமல்நாத் அரசை, சமூக ஊடகத்தில் கரப்சன் (ஊழல்) நாத் என்றே அழைத்தனர். காங்கிரஸ் கட்சி, 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் ரூ.1.98 லட்சம் கோடியை மத்திய பிரதேசத்திற்கு வழங்கியது.

ஆனால், 9 ஆண்டுகளில் மோடி அரசு ரூ.8.33 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்தது என்று அமித்ஷா பேசியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் கடந்த 20 ஆண்டு கால பா.ஜ.க.வின் சாதனைகளை பட்டியலிட்டதுடன், பா.ஜ.க. அரசை பொற்காலம் என மந்திரி அமித்ஷா கூறினார்.

வரும் ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம் ஆவதற்கான அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன. சுயசார்புடைய மாநிலம் ஆவதற்கான, அடிக்கல் நாட்டுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி அல்லது கல்வி என அடுத்த 20 ஆண்டுகளில் மத்திய பிரதேசம் சுயசார்புடன் இருப்பதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று அவர் பேசியுள்ளார்.

53 ஆண்டு காலம் மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தைரியம் இருப்பின் அதற்கான சாதனை அறிக்கையை கொண்டு வரட்டும். அரசியலில் நாங்கள், பொறுப்பேற்பதற்கான கலாசாரம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளோம். நாங்கள் அதிகாரத்தில் உள்ள இடங்களில் எல்லாம், அந்த பகுதி மக்களுக்கு பொறுப்பானவர்களாக இருக்கிறோம் என்று அவர் பேசியுள்ளார்.


Next Story