தேர்தலில் வாக்களிக்க ஜாமீன் வழங்கும்படி சிறையில் உள்ள நவாப் மாலிக் மனு - தள்ளுபடி செய்த கோர்ட்டு


தேர்தலில் வாக்களிக்க ஜாமீன் வழங்கும்படி சிறையில் உள்ள நவாப் மாலிக் மனு - தள்ளுபடி செய்த கோர்ட்டு
x

நாளை மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜாமீன் மனுவை மும்பை கோர்ட்டு நிராகரித்துள்ளது.

மும்பை,

மராட்டிய மந்திரி நவாப் மாலிக் மற்றும் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் ஆகியோர் பணமோசடி வழக்குகள் தொடர்பாக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக ஒரு நாள் ஜாமீன் கோரி நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மும்பை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மராட்டிய மாநிலத்தில் ஆறு இடங்களைக் கொண்ட மாநிலங்களவை தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் ஒரு அங்கமாக இருக்கும் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) க்கு, வேட்பாளரான சஞ்சய் பவாரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. இரண்டு தசாப்தங்களுக்கு பின், மாநிலங்களவை தேர்தலில், ஆறு இடங்களுக்கு ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், தேர்தலில் வாக்களிக்க ஒரு நாள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, மனித பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று கூறி மாலிக் மற்றும் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து, அவர்களுடைய வழக்கறிஞர் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். நாளை மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.

முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான தேஷ்முக் மற்றும் மாலிக் ஆகியோர், அமலாக்க இயக்குனரகம் விசாரித்த பல்வேறு பணமோசடி வழக்குகள் தொடர்பாக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பணமோசடி வழக்கில் தேஷ்முக்கை 2021 நவம்பரில் அமலாக்கத்துறை கைது செய்தது. தப்பியோடிய தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உதவியாளர்களின் நடவடிக்கைகள் குறித்த பணமோசடி விசாரணை தொடர்பாக மாலிக் இந்த ஆண்டு பிப்ரவரி 23 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story