2-வது மனைவி கண்முன்னே வியாபாரி படுகொலை


2-வது மனைவி கண்முன்னே வியாபாரி படுகொலை
x

கலபுரகி டவுனில், கடனை திரும்ப கேட்டு தகராறு செய்ததால் 2-வது மனைவி கண்முன்னே வியாபாரியை வெட்டி கொலை செய்த மைத்துனர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கலபுரகி:

கலபுரகி டவுனில், கடனை திரும்ப கேட்டு தகராறு செய்ததால் 2-வது மனைவி கண்முன்னே வியாபாரியை வெட்டி கொலை செய்த மைத்துனர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

2-வது திருமணம்

கலபுரகி டவுன் அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சந்தோஷ் காலனி பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமிபுத்ரா(வயது 37). வியாபாரியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா என்பவரை திருமணம் செய்து இருந்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சசிகலாவை, லட்சுமிபுத்ரா பிரிந்தார்.

இதையடுத்து பிரீத்தி என்பவரை லட்சுமிபுத்ரா 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரீத்தியின் சகோதரர்களான சிவகாந்த், பிரசாத் ஆகியோர் லட்சுமிபுத்ராவிடம் இருந்து ரூ.8 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். ஆனால் அவர்கள் கடனை திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது. கடனை உடனடியாக திரும்ப தரும்படி கேட்டு சிவகாந்த், பிரசாத்திடம், லட்சுமிபுத்ரா தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆயுதங்களால் தாக்கி கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் தசரா பண்டிகையையொட்டி பிரீத்தியின் வீட்டிற்கு சிவகாந்த், பிரசாத் ஆகியோர் வந்து இருந்தனர். அப்போது கடன் விவகாரத்தில் சிவகாந்த், பிரசாத், லட்சுமிபுத்ரா இடையே தகராறு உண்டானது. இந்த சந்தர்ப்பத்தில் லட்சுமிபுத்ராவின் காலில் விழுந்து சிவகாந்த்தும், பிரசாத்தும் மன்னிப்பு கேட்க முயன்றனர்.

அப்போது 2 பேரையும் தனது காலில் விழ விடாமல் லட்சுமிபுத்ரா தடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் சிவகாந்த்தும், பிரசாத்தும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் லட்சுமிபுத்ராவை சரமாரியாக தாக்கினர். இதனை சற்றும் எதிர்பாராத பிரீத்தி அதிர்ச்சி அடைந்து தனது கணவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து லட்சுமிபுத்ரா உயிரிழந்தார்.

வலைவீச்சு

பின்னர் சிவகாந்த்தும், பிரசாத்தும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்ததும் அசோக்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமிபுத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடனை திரும்ப கேட்டதால் லட்சுமிபுத்ராவை அவரது மைத்துனர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து பிரீத்தி அளித்த புகாரின்பேரில் அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட சிவகாந்த், பிரசாத்தை வலைவீசி தேடிவருகிறார்கள். 2-வது மனைவி கண்முன்னே வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுரகியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story