நெல் அறுவை எந்திர உரிமையாளர் படுகொலை


நெல் அறுவை எந்திர உரிமையாளர் படுகொலை
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரசுராம்புரா அருகே நெல் அறுவை எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்த பணத்தை பங்கு கேட்டதில் ஏற்பட்ட தகராறில் எந்திர உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார். அவர் தமிழ்நாடு சேலத்தை சேர்ந்தவர் ஆவார்.

சிக்கமகளூரு:

பரசுராம்புரா அருகே நெல் அறுவை எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்த பணத்தை பங்கு கேட்டதில் ஏற்பட்ட தகராறில் எந்திர உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார். அவர் தமிழ்நாடு சேலத்தை சேர்ந்தவர் ஆவார்.

சேலத்தை சேர்ந்தவர்

தமிழ்நாடு சேலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 40). இவர் நெல் அறுவை எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடன் சேலத்தைச் சேர்ந்த நைனார், முருகன் ஆகியோரும் தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா பரசுராம்புரா அருகே உள்ள சவுலிகேட் கிராமத்தில் உள்ள வயல்களில் நெல் மற்றும் மக்காச்சோளங்களை அறுவடை செய்ய வந்தனர்.

ஏராளமான நிலங்களில் எந்திரம் கொண்டு நெல் மற்றும் மக்காச்சோளத்தை அறுவடை செய்த அவர்கள் அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இரும்பு கம்பியால் தாக்கி கொலை

அவர்கள் பரசுராம்புரா அருகே உள்ள அரசு பள்ளிக்கு வந்து அறுவடை எந்திரத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அப்போது மணிகண்டன் அங்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் நைனாரிடம், மணிகண்டன் தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டார். அப்போது பங்கு பிரித்து கொடுக்க நைனார் மறுத்தார். மேலும் மணிகண்டனுடன், நைனார் தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த நைனார், இரும்பு கம்பியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கி கொன்றார். அவருக்கு முருகன் உடந்தையாக இருந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

கைது

இதுபற்றி அப்பகுதி மக்கள் பரசுராம்புரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நைனார் மற்றும் முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story