மூதாட்டியை கொன்று உடல் எரிப்பு; பேரன் கைது
மைசூருவில் மூதாட்டியை கொன்று உடலை எரித்த அவரது பேரனை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு:
மைசூருவில் மூதாட்டியை கொன்று உடலை எரித்த அவரது பேரனை போலீசார் கைது செய்தனர்.
பாதி எரிந்த நிலையில்...
மைசூரு அருகே இலவாலா போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்க பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் இலவாலா போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்? என்பது முதலில் தெரியவில்லை.
மேலும் அவரை யாரோ மர்மநபர்கள் கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீமா உத்தரவின்பேரில் மர்மநபர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் எரிந்த நிலையில் கிடந்தவரின் விவரமும் சேகரிக்கப்பட்டு வந்தது.
கொலை
இந்த நிலையில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டவர் மைசூரு காயத்ரிபுரம் பகுதியை சேர்ந்த சுலோச்சனா (வயது 75) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சுலோச்சனாவின் பேரன் சுப்ரீத் (23) என்பவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுலோச்சனாவை சுப்ரீத் கொலை செய்து உடலை கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்க பகுதிக்கு எடுத்து சென்று எரித்தது தெரியவந்தது. இதனை அவரும் ஒப்புக் கொண்டார்.
பேரன் கைது
மேலும் விசாரணையில், சுலோச்சனா தினமும் சுப்ரீத்தை திட்டி கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்ரீத் சம்பவத்தன்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி சுலோச்சனாவை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை பாலிதீன் பையில் சுற்றி ஒரு அட்டை பெட்டியில் வைத்துள்ளார். இதையடுத்து அதனை காரில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்க பகுதிக்கு எடுத்து சென்று, அங்கு உடலை தீவைத்து எரித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுப்ரீத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.