ராமநகர் அருகே எக்ஸ்பிரஸ் சாலைக்கு கட்டணம் செலுத்துவதில் தகராறு; ஆக்கி மட்டையால் தாக்கி சுங்கச்சாவடி ஊழியர் கொலை


ராமநகர் அருகே எக்ஸ்பிரஸ் சாலைக்கு கட்டணம் செலுத்துவதில் தகராறு; ஆக்கி மட்டையால் தாக்கி சுங்கச்சாவடி ஊழியர் கொலை
x

ராமநகர் அருகே எக்ஸ்பிரஸ் சாலையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுங்கச்சாவடி ஊழியரை ஆக்கி மட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ராமநகர்:

ராமநகர் அருகே எக்ஸ்பிரஸ் சாலையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுங்கச்சாவடி ஊழியரை ஆக்கி மட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கட்டணம் செலுத்துவதில் தகராறு

பெங்களூரு தெற்கு தாலுகா கரிகல் கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார்(வயது 26). இவர், பெங்களூரு-மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதாவது ராமநகர் மாவட்டம் பிடதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சேஷகிரிஹள்ளி கிராமத்தில் இருக்கும் எக்ஸ்பிரஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் தான் பவன்குமார் வேலை செய்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அவர் வழக்கம் போல் சுங்கச்சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் மைசூருவில் இருந்து பெங்களூருவை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரில் ஏராளமான வாலிபர்கள் இருந்தனர். சேஷகிரிஹள்ளியில் உள்ள சுங்கச்சாவடிக்கு கார் வந்ததும், சுங்க கட்டணம் கொடுக்கும்படி கார் டிரைவரிடம் பவன்குமார் கேட்டுள்ளார். இந்த கட்டணம் கொடுப்பது தொடர்பாக பவன்குமாருக்கும், காரில் இருந்தவர்களுக்கும் இடையே திடீரென்று தகராறு உண்டானது.

ஆக்கி மட்டையால் தாக்குதல்

மேலும் சுங்கச்சாவடியில் வைத்தே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில், பவன்குமாருக்கும், அவருடன் இருந்த மற்றொரு ஊழியருக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது. பின்னர் கட்டணத்தை கொடுத்து விட்டு சுங்கச்சாவடியில் இருந்து காரில் வந்த நபர்கள் புறப்பட்டனர். நள்ளிரவு 12.30 மணியளவில் சுங்கச்சாவடி அருகே பவன்குமார் சாப்பிடுவதற்காக சென்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் பவன்குமாரை பின்தொடர்ந்து மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பவன்குமாரை சுற்றி வளைத்து அடித்து, உதைத்து தாக்கினார்கள். அத்துடன் தங்களிடம் இருந்த ஆக்கி மட்டையால் பவன்குமாரை மர்மநபர்கள் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் பிடதி போலீசார் விரைந்து வந்து பவன்குமார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சுங்கச்சாவடியில் கட்டணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காரில் வந்த மர்மநபர்களே, பவன்குமார் சாப்பிட செல்லும் சந்தர்ப்பத்தில், அவரை பின்தொடர்ந்து சென்று ஆக்கி மட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பசவேசுவராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக மர்மநபர்களை பிடிக்க பிடதி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பிடதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story