இரும்பு கம்பியால் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் படுகொலை
பெங்களூருவில் அண்ணன் வீட்டில் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரும்பு கம்பியால் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
ஜே.பி.நகர்:
பெங்களூருவில் அண்ணன் வீட்டில் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரும்பு கம்பியால் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
நண்பர் வீட்டில் தங்கினார்
பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் கணேஷ்(வயது 43). ஆட்டோ டிரைவரான இவர், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் ஒரு நிறுவனத்தில் தற்போது ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஜே.பி.நகரில் உள்ள தன்னுடைய வீட்டை காலி செய்துவிட்டு, சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தன்னுடைய நண்பர் மல்லேஷ் வீட்டில் கணேஷ் தங்கி இருந்தார்.
அங்கு அவர் தங்குவதற்கு, மல்லேசின் சகோதரர் நாராயணா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதுதொடர்பாக தனது சகோதரரிடமும் கணேசை வீட்டில் தங்க வைக்க கூடாது என்று நாராயணா சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மல்லேஷ் வெளியே சென்றிருந்தார். அப்போது கணேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் நாராயணா வீட்டுக்கு வந்துள்ளார்.
கம்பியால் தாக்கி கொலை
தனது சகோதரர் இல்லாததை தெரிந்து கொண்ட நாராயணா, கணேசுடன் வீட்டை காலி செய்யும்படி கூறி தகராறு செய்துள்ளார். பின்னர் கணேஷ் சென்று படுத்து விட்டார். இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று கணேசை இரும்பு கம்பியால் நாராயணா சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து நாராயணா தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய கணேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ஜே.பி.நகர் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது தனது அண்ணன் வீட்டில் கணேஷ் தங்கி வந்த விவகாரத்தில், அவரை நாராயணா கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணியபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நாராயணாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.