மிசோரம் ஏர்போர்ட்டில் விழுந்து நொறுங்கிய மியான்மர் ராணுவ விமானம்: 8 பேர் படுகாயம்


மிசோரம் ஏர்போர்ட்டில் விழுந்து நொறுங்கிய மியான்மர் ராணுவ விமானம்: 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Jan 2024 9:04 AM GMT (Updated: 23 Jan 2024 9:08 AM GMT)

மியான்மரில் இருந்து இந்தியாவிற்கு தப்பி வந்த வீரர்கள், எல்லையோர மாநிலமான மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்தனர்.

ஐசால்:

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில், கடந்த வாரம் ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுவினர் (அரக்கான் ராணுவம்) நடத்திய தாக்குதலின்போது அங்கிருந்து தப்பிய ராணுவ வீரர்கள் 276 பேர் இந்தியாவுக்குள் நுழைந்தனர். எல்லையோர மாநிலமான மிசோரமின் லாங்திலாய் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அசாம் ரைபிள் படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 184 பேர் நேற்று மியான்மரின் ரக்கினே மாவட்டம் சித்வே நகருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஐசால் அருகே உள்ள லெங்புயி விமான நிலையத்தில் இருந்து மியான்மர் விமானப்படை விமானங்களில் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 92 வீரர்களை இன்று அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மியான்மரில் இருந்து விமானப்படை விமானம் வந்தது.

ஆனால், லெங்புயி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் விழுந்ததால் விமானம் இரண்டாக உடைந்தது. விமானத்தில் இருந்த 14 பேரில் 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தை தொடர்ந்து லெங்புயி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்ளன.


Next Story