பிரான்ஸ் தலைமையில் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் கடற்படை பயிற்சி தொடக்கம்


பிரான்ஸ் தலைமையில் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் கடற்படை பயிற்சி தொடக்கம்
x

பிரான்ஸ் தலைமையில் நடைபெறும் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்கின்றன.

புதுடெல்லி,

பிரான்ஸ் தலைமையில் 'லா பெரோஸ்' என்ற பலதரப்பு கூட்டு கடற்படை பயிற்சி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. அதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடந்த கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படையும் இணைந்து கொண்டது.

இதனைத் தொடர்ந்து 3-வது முறையாக 'லா பெரோஸ்' பலதரப்பு கடற்படை பயிற்சி இந்திய பெருங்கடலில் நேற்று தொடங்கியது. பிரான்ஸ் தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்கின்றன.

'லா பெரொஸ்' கூட்டுப் பயிற்சி என்பது கடற்படைகளுக்கிடையே இயங்கும் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையே பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பலதரப்பு கடற்படை பயிற்சியாகும்.

இந்தப் பயிற்சியானது, இதில் பங்கேற்கும் நாடுகளுக்கு பன்னாட்டுச் சூழலில் தங்கள் செயல்பாடுகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் கடல்சார் வழிமுறைகளை நன்கு புரிந்து கொள்ளவும், ஒன்றாகச் செயல்படும் திறனை மேம்படுத்தவும் ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது.


Next Story