விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வெற்றிக்கு நேருவின் தொலைநோக்கு பார்வையே காரணம் - காங்கிரஸ்
விண்வெளி ஆய்வுகளில் இந்தியாவின் வெற்றிக்கு நேருவின் தொலைநோக்கு பார்வையே காரணம் என காங்கிரஸ் கூறியுள்ளது.
சந்திரயான்-3 விண்கலம்
நிலவின் தென் துருவத்தை இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் ஆய்வு செய்து வருகிறது. இது உலக நாடுகளின் பார்வையை இந்தியாவை நோக்கி திருப்பி இருக்கிறது. சந்திரயான்-3 விண்கலம் மட்டுமின்றி இந்தியாவின் விண்வெளி ஆய்வுப்பயண வெற்றிகளுக்கு நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தொலைநோக்கு பார்வையே காரணம் என காங்கிரஸ் கட்சி உறுதிபட தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
தற்சார்பு வலியுறுத்தல்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) மகத்தான சாதனை குறித்து பாகிஸ்தானின் ஊடகங்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றன. இந்தியாவின் விண்வெளி ஆய்வுத்துறை 1962-ம் ஆண்டு தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அதாவது 1961-ன் இறுதியில் பாகிஸ்தான் விண்வெளி ஆய்வுத்துறை தொடங்கியும் அவர்களால் சாதிக்க முடியவில்லை என்ற புலம்பலும் கேட்கின்றன.
அமெரிக்க உதவியை நாடியும், சோவியத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பைக் கோரியும் டெல்லியில் சில குரல்கள் எழுந்தபோதும், இந்திய விண்வெளி ஆய்வுத்துறை தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பிரதமர் நேரு தற்சார்பை வலியுறுத்தினார் என்பது அங்கீகரிக்கப்படவில்லை.
பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி
இந்திய விண்வெளித் திட்டம் உள்நாட்டு நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் முதலில் நேரு, பின்னர் இந்திரா காந்தி ஆகியோர் உறுதியாக இருந்தனர். இதன்படி ஹோமி பாபா, விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், பி.என்.ஹக்சர் மற்றும் பலரால் வழிநடத்தப்பட்டு செல்வாக்கு பெற்றது.
தொலைநோக்கு பார்வை
நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான அடித்தளமும், பரந்த உள்கட்டமைப்பும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மிகவும் ஏழ்மையான நாடான இந்தியா, இத்தகைய முதலீடுகளால் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்ற கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார்.
இருப்பினும், ஒரு தற்சார்பு மற்றும் அறிவியல் பூர்வமாக முன்னேறிய தேசத்தின் தொலைநோக்கு பார்வைதான் இத்தகைய வளமான பலன்களை அளித்து உள்ளது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.