புதிய கல்விக்கொள்கை எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப கல்வி முறையை மாற்றியமைத்து உள்ளது - பிரதமர் மோடி


புதிய கல்விக்கொள்கை எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப கல்வி முறையை மாற்றியமைத்து உள்ளது - பிரதமர் மோடி
x

புதிய கல்விக்கொள்கை எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப இந்தியாவின் கல்வி முறையை மாற்றியமைத்து உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

பட்ஜெட் கருத்தரங்கு

2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை வலிமையாக அமல்படுத்துவதற்கான யோசனை மற்றும் பரிந்துரைகளை பெறும் நோக்கில் கருத்தரங்குகள் நடந்து வருகின்றன.

இந்த வரிசையில் 3-வது கருத்தரங்கு நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கல்விக்கொள்கை

புதிய கல்விக்கொள்கையில் கல்வி மற்றும் திறன் ஆகிய இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது கல்வி மற்றும் திறன் துறைகளில் மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசை ஊக்குவிக்கிறது.

இதன் மூலம் இளைஞர்களின் திறன் மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப கல்வி மற்றும் திறன் ஆகியவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நமது மாணவர்களை கடந்த கால விதிமுறைகளில் இருந்து விடுவிக்கிறது.

இடைவெளியை நிரப்பும்

கொரோனா தொற்று காலத்தில் புதிய வகை வகுப்பறைகளை உருவாக்குவதற்கு தொழில்நுட்பம் உதவியது. எந்த இடத்திலும் அறிவை அணுகுவதை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. இத்தகைய எதிர்கால நடவடிக்கைகள் நமது கல்வி, திறன் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் முழு இடத்தையும் மாற்றப் போகின்றன.

இனிநம் ஆசிரியர்களின் பங்களிப்பு வகுப்பறையுடன் நின்றுவிடாது. கிராமம் மற்றும் நகரப் பள்ளிகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் அதே வேளையில், ஆசிரியர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள நமது கல்வி நிறுவனங்களுக்கு பல வகையான கற்பித்தல் பொருட்கள் கிடைக்கும்.

பழங்குடியினர் திட்டம்

இன்று, தேசிய வேலைவாய்ப்பு இணையதளத்தில் சுமார் 75,000 முதலாளிகள் உள்ளனர். அங்கு இதுவரை 25 லட்சம் வேலைவாய்ப்புகளுக்கான தேவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலக நாடுகள் இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாகப் பார்க்கின்றன. இங்கு முதலீடு செய்வதில் சர்வதேச அளவில் ஆர்வம் உள்ளது. பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா 4.0 மூலம் வரும் ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்களின் திறமை, மறுதிறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் தேவைக்கேற்ப திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆராய்ச்சி சூழல்

செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் டிரோன்கள் போன்ற தொழில்துறைகளுக்கு திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் திறமைகளை தேடுவதை எளிதாக்குகிறது. நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழல் அமைப்பை வலுப்படுத்த தனியார் துறை ஒவ்வொரு நடவடிக்கையையும் அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story