காங்கிரசில் எனது பங்களிப்பை கார்கே முடிவு செய்வார் - ராகுல் காந்தி


காங்கிரசில் எனது பங்களிப்பை கார்கே முடிவு செய்வார் - ராகுல் காந்தி
x

காங்கிரஸ் கட்சியில் எனது பங்களிப்பு என்ன என்பதை புதிய தலைவர் கார்கே முடிவு செய்வார் என்று ராகுல் காந்தி கூறினார்.

அமராவதி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர மாநிலத்தில் தற்போது இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

அவர் அதோனி என்ற இடத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் எனது பங்களிப்பு உள்ளது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். கட்சியில் எனது பங்களிப்பு என்ன, நான் எப்படி பணி அமர்த்தப்பட வேண்டும் என்பதை கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார்.

கட்சியின் இறுதி முடிவை காங்கிரஸ் தலைவர்தான் எடுப்பார். எனவே கட்சியை முன்னோக்கி எவ்வாறு அழைத்துச்செல்வது என்பதை அவரே முடிவு செய்வார்.

மல்லிகார்ஜூன கார்கேயும் சரி, சசி தரூரும் சரி, இருவருமே அனுபவம் மிக்கவர்கள், புரிதல் உள்ளவர்கள். அவர்களுக்கு எனது ஆலோசனை தேவையில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.

நான் கார்கேவுக்கு முக்கியமானவரா என கேட்கிறீர்கள். இதுவெளிப்படையானது.

காங்கிரஸ் கட்சியில் ஒளிவுமறைவு இல்லாத தலைவர் தேர்தல் முறை உள்ளது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். பா.ஜ.க.விலோ அல்லது பிற மாநில கட்சிகளிலோ தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவது இல்லை. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. இதைக் கேட்பதிலும் யாருக்கும் ஆர்வம் இருப்பதாக தோன்றவில்லை.

கட்சியில் தேர்தல் கமிஷன் இருக்கிற ஒரே அரசியல் கட்சியும் காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.

நான் டி.என்.சேஷன் போன்ற மதுசூதன் மிஸ்திரியுடன் பணியாற்றி உள்ளேன். அவர் முற்றிலும் நேர்மையானவர், உறுதியான மனிதர்.

என்ன பிரச்சினை என்றாலும் அவர்கள் வெளிப்படையாகவே கட்சியின் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க முடியும். (தலைவர் தேர்தலில்) முறைகேடுகள் நடந்திருக்கிறதா, இல்லையா என்பதை அவர்கள் கண்டறிவார்கள்.

இதைச் செய்வதற்கு காங்கிரஸ் கட்சியில் நிறுவன ரீதியிலான கட்டமைப்பு உள்ளது. இதை அதனால் நேர்த்தியாக செய்ய முடியும் என்று அவர் கூறினார்.


Next Story