மராட்டிய அரசியலில் புதிய திருப்பம்; கவர்னருடன் பா.ஜனதா தலைவர்கள் திடீர் சந்திப்பு


மராட்டிய அரசியலில் புதிய திருப்பம்; கவர்னருடன் பா.ஜனதா தலைவர்கள் திடீர் சந்திப்பு
x

மராட்டிய அரசியலில் புதிய திருப்பமாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை பா.ஜனதா தலைவர்கள் நேற்று இரவு சந்தித்து பேசினர்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு, சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அந்த கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 39 பேர், மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். அவர்களுடன் 10 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கவிழ வாய்ப்பு உள்ளது. கடந்த 20-ந் தேதி இரவில் தொடங்கிய இந்த அரசியல் குழப்பம், ஒருவாரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.

அரசை காப்பாற்றும் முயற்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். நேற்று தனது மந்திரி சகாக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிடிவாதமாக கவுகாத்தி ஓட்டலிலேயே முகாமிட்டு உள்ளனர்.

இதற்கு மத்தியில் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜனதா நேற்று வெளிப்படையாக களத்தில் இறங்கியது. பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மராட்டியத்தில் நிலவும் அரசியல் குழப்பம் மற்றும் பா.ஜனதா ஆட்சியமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஜே.பி. நட்டாவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களுடன் சட்ட நிபுணர் ஒருவரும் இருந்தார்.

இந்த நிலையில் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் இரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் மராட்டிய அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.


Next Story