2 பயங்கரவாதிகள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்


2 பயங்கரவாதிகள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:45 PM GMT)

பெங்களூருவில் கைதான 2 பயங்கரவாதிகள் மீது பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அல்-கொய்தா அமைப்பில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தது அம்பலமாகி உள்ளது.

ெபங்களூரு:

பெங்களூருவில் கைதான 2 பயங்கரவாதிகள் மீது பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அல்-கொய்தா அமைப்பில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தது அம்பலமாகி உள்ளது.

2 பயங்கரவாதிகள் கைது

பெங்களூரு திலக்நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்பேரில் கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர்கள், அசாமை சேர்ந்த அக்தர் ஹூசைன், மேற்கு வங்காளத்தை சேர்ந்த அப்துல் அலீம் மண்டல் என்பதும், அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக திலக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி இருந்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த நிலையில், கைதான பயங்கரவாதிகள் அக்தர் ஹூசைன், அப்துல் அலீம் ஆகியோர் மீது நேற்று முன்தினம் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பயங்கரவாதிகள் 2 பேரும் அல்-கொய்தா அமைப்பில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவல் தொடர்பு தளங்கள் மூலம் வெளிநாட்டில் உள்ள ஆன்லைன் கையாளுபவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் உள்ளூர் இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட தூண்டுவதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story