தமிழகம், தெலுங்கானாவில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; பணம், ஆவணங்கள் பறிமுதல்


தமிழகம், தெலுங்கானாவில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; பணம், ஆவணங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Sep 2023 12:59 PM GMT (Updated: 16 Sep 2023 4:28 PM GMT)

தமிழகம், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வெளிநாட்டு கரன்சிகள், ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

புதுடெல்லி,

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். தமிழகத்தின் கோவையில் 22 இடங்கள், சென்னையில் 3 இடங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூரில் ஓரிடம் என மொத்தம் 26 இடங்களிலும், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் 5 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

படிக்கின்ற மாணவர்களை அரபி மொழி வகுப்புகள் என்ற பெயரில் பயங்கரவாத ஆள்சேர்ப்புக்கு பயன்படுத்தி கொள்கின்றனர் என்று கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை நடந்தது.

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் வழியே ஆன்லைனிலேயே இதற்கான நடவடிக்கைகள் நடந்துள்ளன என என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.

இந்த சோதனையில் பல்வேறு டிஜிட்டல் உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள், அவற்றுடன் இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.

இதேபோன்று சோதனையில் கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்புகள் மற்றும் ஹார்டு டிஸ்குகள் ஆகியவற்றில் உள்ள தரவுகளை பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சோதனையில், வட்டார மற்றும் அரபி மொழிகளில் இருந்த பல்வேறு புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன. இந்திய கரன்சியில் ரூ.60 லட்சம் பணம் மற்றும் அமெரிக்க கரன்சியில் ரூ.15.12 லட்சம் பணம் (18,200 அமெரிக்க டாலர்) கைப்பற்றப்பட்டு இருந்தன.

சோதனையின் பின்னணி:

கோவை மாவட்டம் உக்கடத்தின் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி அவருடைய வீட்டில் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. விசாரணையில் வழக்கு தொடர்பாக முகமது தவ்பிக், குன்னூரை சேர்ந்த உமர்பாருக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி ஆகியோரை கைது செய்தனர். இதன் மூலம் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டின் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் திருவிக நகர் முஜ்பீர் ரகுமான் என்பவர் வீட்டிலும், நீலாங்கரை, கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகமது இத்ரிஸ் என்பவரின் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக, கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. கோவை அரபி கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


Next Story