கேரளாவில் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு வந்தவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை


கேரளாவில் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு வந்தவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை
x

கேரளாவில் ரெயிலில் தீ வைப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு வந்தவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த மாதம் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ெரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி என்பவரை போலீசார் கைது செய்தனர். தீ எரிப்பு சம்பவத்தில் தீவிரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பியின் சொந்த ஊர் டெல்லி ஷகீன்பாக் ஆகும். இதனால் டெல்லி மற்றும் கேரள போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் டெல்லியில் ஷாருக் செய்பியுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஷாருக் செய்பியுடன் தொடர்பு வைத்திருந்த டெல்லியை சேர்ந்த முகம்மது ஷாபி (வயது46) மற்றும் அவருடைய மகனை விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொச்சிக்கு வரவழைத்தனர். இதை தொடர்ந்து முகம்மது ஷாபியும், அவரது மகனும் கொச்சிக்கு வந்தனர். இவர்கள் கொச்சியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள். இன்று (சனிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் முகம்மது ஷாபி விடுதி கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இதுகுறித்து கொச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முகம்மது ஷாபியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story