கேரளாவில் நிபா வைரஸ் பரவல்; 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு


கேரளாவில் நிபா வைரஸ் பரவல்; 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Sept 2023 12:14 PM (Updated: 13 Sept 2023 4:35 PM)
t-max-icont-min-icon

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து, 7 கிராம பஞ்சாயத்துகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அரசு அறிவித்து உள்ளது.

கோழிக்கோடு,

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நிபா வைரஸ் பரவல் காணப்பட்டது. 2018-ம் ஆண்டு 17 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 9 வயது சிறுவன், 4 வயது சிறுவனும் அடங்குவார்கள். சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் 75 பேர் உள்ளனர். 130 பேர் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து, கேரள சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் சட்டசபையில் கூறும்போது, இந்த நிபா வைரசானது குறைவான தொற்ற கூடிய தன்மை கொண்டபோதும், அதிக உயிரிழப்பு விகிதம் கொண்டது என்றும் இது மனிதரில் இருந்து மனிதருக்கு பரவ கூடியது என்றும் கூறியுள்ளார்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, புனே நகரின் தேசிய வைராலஜி மையத்தின் குழுவினர் கேரளாவுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் மொபைல் ஆய்வகங்களை அமைத்து பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தஞ்சேரி, மருதோங்கரை, திருவள்ளூர், குட்டியடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி மற்றும் கவிழும்பாறை ஆகிய இந்த 7 பஞ்சாயத்துகளில் உள்ள 43 வார்டுகளின் உள்ளேயும், வெளியேயும் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எனினும், அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கான கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story