'ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை' - உயர்மட்டக் குழுவிற்கு மம்தா பானர்ஜி கடிதம்


ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை - உயர்மட்டக் குழுவிற்கு மம்தா பானர்ஜி கடிதம்
x

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டக் குழு இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டது.

மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை பெறப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வரும் 15-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி உயர்மட்டக் குழுவிற்கு இதுவரை 5,000 ஆலோசனைகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை' என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கடந்த 1952 ஆண்டு முதல், ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அளவில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சில ஆண்டுகளாக அதே நடைமுறை இருந்தது, ஆனால் பின்னர் மாறிவிட்டது.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நாடாளுமன்ற அமைப்பில் மத்திய மற்றும் மாநில தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறுவது அடிப்படை அம்சமாகும். இது இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். இது மாற்றப்படக்கூடாது."

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Next Story