இடைநின்ற 2,901 மாணவர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை; ஐகோர்ட்டில், பள்ளிக் கல்வித்துறை அறிக்கை

அரசு பள்ளிகளில் படித்துவிட்டு இடைநின்ற 2,901 பள்ளி மாணவர்களின் விவரங்கள் கிடைக்கவில்லை என்று ஐகோர்ட்டில் பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
அரசு பள்ளிகளில் படித்துவிட்டு இடைநின்ற 2,901 பள்ளி மாணவர்களின் விவரங்கள் கிடைக்கவில்லை என்று ஐகோர்ட்டில் பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
பொதுநல மனு
கர்நாடகத்தில் 45 ஆயிரம் அரசு தொடக்க பள்ளிகளும், 5 ஆயிரத்துக்கும் அதிகமான உயர் நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் இடைநிற்றல் செய்கின்றனர்.
குடும்ப சூழல், படிப்பின் மீது வெறுப்பு போன்ற காரணங்களால் அவர்கள் பள்ளியை விட்டு விலகுகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர் கதையானது. இதனால் கர்நாடக ஐகோர்ட்டில் இதுதொடர்பாக பொது நல மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது பள்ளியில் படித்த மாணவர்கள் இடைநின்றதும், அவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்குமாறு பள்ளி கல்வி கமிஷனர் விஷ்ஹல்லுக்கு உத்தரவிடப்பட்டது.
2,901 மாணவர்கள்...
அதன்பேரில் அவர் பள்ளி மாணவர்கள் குறித்து ஆய்வு நடத்தி வந்தார். இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஆஜரான பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் விஷ்ஹல் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில் கர்நாடக பள்ளிகளில் படித்துவிட்டு, தற்போது பள்ளியில் இருந்து நின்றவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 2,901 மாணவர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. அதுபோன்ற மாணவர்கள் வாடகை வீடுகள் அல்லது போலியான வீட்டு முகவரியை கொடுத்து பள்ளியில் சேர்ந்து இருந்தது தெரிந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி, அந்த மாணவர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.






