நூதன புகார்: மேக்-அப் சாதனங்களை பயன்படுத்திய மாமியார்; விவாகரத்து கோரிய மருமகள்


நூதன புகார்:  மேக்-அப் சாதனங்களை பயன்படுத்திய மாமியார்; விவாகரத்து கோரிய மருமகள்
x

அடுத்த கட்ட ஆலோசனையில் அந்த பெண் மற்றும் கணவர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் வழங்கப்படும் என கவுர் கூறியுள்ளார்.

ஆக்ரா,

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் மால்புரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் விவாகரத்து கோரியதற்கான காரணம் ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.

அந்த பெண்ணும், அவருடைய சகோதரியும் எட்டு மாதங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவரை திருமணம் செய்து கொண்டனர். எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில், மருமகளின் அனுமதியின்றி அவருடைய மேக்-அப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

இதனை அறிந்த அந்த பெண் ஆத்திரமடைந்து உள்ளார். ஏதேனும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வேண்டுமென்றாலும், மருமகளிடம் மேக்-அப் பொருட்கள் இருக்காது. அவருடைய மாமியாரே அவற்றை பயன்படுத்தி வந்திருக்கிறார்.

இதுபற்றி மாமியாரிடம் மருமகள் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஆனாலும் இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை. நடந்த விசயங்களை தன்னுடைய மகனிடம் மாமியார் தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்து அந்த பெண்ணும், அவருடைய சகோதரியும் விரட்டி விடப்பட்டு இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்தே புகார் அளிக்க மருமகள், போலீசிடம் சென்றிருக்கிறார். 2 மாதங்களாக சகோதரிகள் இருவரும் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆக்ரா போலீசுக்கு உட்பட்ட குடும்ப ஆலோசனை மையத்தில், நடந்த விசயங்களை மருமகள் கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்று கிழமை, மருமகள் மற்றும் மாமியார் இருவரையும் அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது என அமித் கவுர் என்று ஆலோசகர் கூறியுள்ளார்.

எனினும், இந்த விசயத்தில் விவாகரத்து வேண்டும் என்று மருமகள் பிடிவாதத்துடன் இருக்கிறார். அனுமதியின்றி மேக்-அப் பொருட்களை மாமியார் பயன்படுத்துகிறார் என்பது மட்டுமே விசயம் இல்லை.

அந்த பெண்ணின் கணவர், குடும்ப வன்முறையில் ஈடுபடுகிறார் என்றும் தாயார் கூறும் விசயங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார் என்றும் கூறியுள்ளார். அடுத்த கட்ட ஆலோசனையில் அந்த பெண் மற்றும் கணவர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் வழங்கப்படும் என கவுர் கூறியுள்ளார்.


Next Story