ஒடிசா: சரக்கு கப்பலில் ரஷிய பொறியியலாளர் மர்ம மரணம்; 2 வாரங்களில் 3-வது சம்பவம்


ஒடிசா: சரக்கு கப்பலில் ரஷிய பொறியியலாளர் மர்ம மரணம்; 2 வாரங்களில் 3-வது சம்பவம்
x

ஒடிசாவில் சரக்கு கப்பல் ஒன்றில் ரஷிய நாட்டை சேர்ந்த தலைமை பொறியியலாளர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.



பாரதீப்,


ஒடிசாவின் சரக்கு கப்பல் ஒன்றில் தலைமை பொறியியலாளராக பணியாற்றி வந்த ரஷியாவை சேர்ந்த மிலியாகோவ் செர்கே என்பவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

கடற்படை போலீசார் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை அளித்திடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி பாரதீப் துறைமுக கழகத்தின் தலைவர் பி.எல். ஹரநாத் இன்று கூறும்போது, இன்று அதிகாலை 3 மணியளவில், ரஷிய கப்பலில் இருந்து எங்களுக்கு தகவலொன்று வந்தது. அதில், ரஷிய ரஷிய நாட்டு பொறியியலாளர் இறந்து கிடக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

எங்களது துறைமுக சுகாதார அதிகாரி கப்பலுக்கு சென்றுள்ளார். முறையான அனைத்து வித நடைமுறைகளும் பின்பற்றப்படும் என கூறியுள்ளார். ஒடிசாவில் கடந்த 2 வாரங்களில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும்.

ரஷியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ். அவர், கடந்த டிசம்பர் இறுதியில் ஒடிசாவுக்கு சுற்றுலாவுக்காக தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.

ஒடிசாவின் ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் ஒன்றாக தங்கியிருந்த அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மொத்தம் 4 பேர் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஓட்டலின் 3-வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் தகவல் அறிந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

இதுபற்றி ஆன்டோவ் மரண வழக்கை விசாரித்து வரும் போலீஸ் சூப்பிரெண்டு விவேகானந்தா சர்மா கூறும்போது, பாவெல் கடந்த டிசம்பர் 25-ந்தேதி மரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அவரது உடலை கடந்த அதற்கு அடுத்த நாள் தகனம் செய்து விட்டோம் என கூறியுள்ளார்.

ரஷியர்கள் மரணம் பற்றிய தகவலை ரஷிய நாடாளுமன்ற துணை சபாநாயகரான வியாசெஸ்லாவ் கார்துகின் மற்றும் ரஷிய சட்டசபை சபாநாயகர் விளாடிமிர் கிசெலியோவ் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்.

ஆன்டோவின் சக கட்சி உறுப்பினரான விளாடிமிர் புடானோவ் (வயது 61) என்பவர் அதே ராயகடா ஓட்டலில் மரணம் அடைந்த 3 நாட்களுக்குள் பாவெல்லும் மரணம் அடைந்து உள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பினை அடுத்து, ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தவர்களில் ஆன்டோவும் ஒருவர் ஆவார். எனினும், அதுபற்றி வெளியான வாட்ஸ்அப் தகவல் உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது. பின்பு புதினுக்கான தனது ஆதரவை அவர் வெளியிட்டார்.

இந்நிலையில், ஆன்டோவ் மரணம் பற்றிய பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த டிசம்பர் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில், உள்காயம் ஏற்பட்டதில் ஆன்டோவ் மரணம் உடைந்து உள்ளார் என அதற்கான காரணம் தெரிவிக்கின்றது.

அவரது நண்பரான விளாடிமிர் புடானோவ் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார் என்றும் மற்றொரு பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது.

சக நண்பர் மரணம் அடைந்ததில் அதிர்ச்சி அடைந்து ஆன்டோவ் தற்கொலை செய்து கொண்டார் என ஒருபுறம் கூறப்படுகிறது. எனினும், அது தள்ளி விடப்பட்ட ஒன்றாக இருக்க கூடும் என்றும் மற்றொரு புறம் கூறப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்காக அவர்கள் தங்கியிருந்த ராயகடா ஓட்டலுக்கு, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சென்று உள்ளனர். ரஷிய சுற்றுலாவாசிகளான இவர்களுடன் தம்பதியான மிகாயில் துரோவ் மற்றும் நடாலியா பனசெங்கோ என்ற தம்பதியும் தங்கி இருந்துள்ளது. அவர்கள் இருவரும், வேறொரு அறையில் தனியாக தங்கியிருந்து உள்ளனர்.

அவர்கள் இருவரும் விசாரணைக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், ரஷிய நாட்டை சேர்ந்த 3-வது நபர் ஒருவர் ஒடிசாவின் சரக்கு கப்பலில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ள தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Next Story