கேரளாவில் ஆரஞ்சு எச்சரிக்கை; 3 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை
கேரளாவில் ஆரஞ்சு எச்சரிக்கையை முன்னிட்டு 3 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொச்சி,
நாட்டில் வடஇந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லி, உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்படுகிறது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்படுகிறது என தெரிவித்தது.
இதனை முன்னிட்டு கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், கண்ணூர் பல்கலை கழகத்தில் பி.எஸ்.சி. தேர்வில் எந்த மாற்றமும் இல்லை என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.