ஆயுதங்களுடன் 200 சீன வீரர்கள்... தடுத்து நிறுத்திய 50 இந்திய வீரர்கள்... 30 நிமிடங்கள் - எல்லையில் நடந்தது என்ன?


தினத்தந்தி 13 Dec 2022 4:01 AM GMT (Updated: 13 Dec 2022 6:17 AM GMT)

அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன. இதில், இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டது.

இட்டாநகர்,

இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய - சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த மோதலுக்கு பின் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளன. அதன் பின் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிழக்கு லடாக்கின் ரின்சன் லா பகுதியிலும் இந்திய - சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியா - சீன படைகள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலபிரதேச எல்லையில் இரு படைகளும் மோதிக்கொண்டுள்ளன. அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டார் எல்லைப்பகுதியில் இருபடைகளும் கடந்த 9-ம் தேதி மோதிக்கொண்டுள்ளன. இந்த மோதலில் இரு தரப்பிலும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மோதல் தொடர்பான முழு விவரம்:-

50 இந்திய வீரர்கள்:-

சீனாவுடனான எல்லைப்பகுதியான அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டார் யங்ங்ட்சி என்ற பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 9-ம் தேதி இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

ஆயுதங்களுடன் 200 சீன வீரர்கள்:-

அப்போது, அந்த பகுதிக்கு 200 சீன வீரர்கள் வந்தனர். அவர்கள் மரக்கட்டையில் ஆணிகள் பொறுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆணிகள் பொறுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் உள்பட கொடூர ஆயுதங்களை கொண்டு வந்தனர். மின்சாரம் பாய்ச்சி 'ஷாக்' கொடுக்கும் துப்பாக்கி போன்ற 'டசீர்ஸ்' என்ற ஆயுதத்துடன் வந்தனர். துப்பாக்கி கொண்டுவரவில்லை.

எல்லையில் முன்னோக்கி நகர்தல்:-

ஆயுதங்களுடன் வந்த 200 சீன வீரர்கள் எல்லையில் முன்னோக்கி நகர்ந்து வந்தனர். ரோந்து பணியில் ஈடுபடும் பகுதியை தாண்டி ஆயுதங்களுடன் சீன வீரர்கள் முன்னோக்கி வந்தனர்.

தடுத்து நிறுத்திய இந்திய வீரர்கள்:-

சீன வீரர்கள் 200 பேர் முன்னோக்கி நகர்ந்து வருவதை கண்ட இந்திய வீரர்கள் 50 பேர் அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

இரண்டடுக்கு பாதுகாப்பு:-

2020-ம் ஆண்டு லடாக் மோதலுக்கு பின் சீன எல்லையில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் உள்ள படையினர் எல்லையில் ரோந்து மற்றும் சீன படைகளின் வலிமைக்கு ஏற்ப விரைவு எதிர்வினை குழுவிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, முதல் அடுக்கை அடுத்து எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டிற்கு மிக அருகே 2-ம் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லடாக் மோதலுக்கு பின் போடப்பட்ட இந்த 2-ம் நிலை அடுக்கில் அதிக அளவிலான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய - சீன வீரர்கள் மோதல்:-

எல்லையில் அத்துமீறி முன்னேறி வந்த 200 சீன வீரர்களை 50 வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் சீன படையினர் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர், இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

2-ம் அடுக்கு படையினர் விரைவு:-

எல்லையில் சீன வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வருவது குறித்து முதல் அடுக்கு படையினர் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, 2-ம் அடுக்கில் இருந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

30 நிமிடங்கள்:-

30 நிமிடங்களில் 2-ம் அடுக்கு வீரர்கள் மோதல் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். 200 சீன வீரர்களின் எண்ணிக்கையை விட இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளனர்.

ஆயுதங்கள்:-

சீன வீரர்கள் துப்பாக்கி கொண்டு வராமல் ஆணி பொறுத்திய இரும்பு கம்பி, மரக்கட்டை கொண்டுவந்த நிலையில் கூடுதலாக விரைந்த இந்திய படைகள் சீனா வைத்திருந்த ஆயுதங்களை விட அதிக ஆயுதங்கள் வைத்திருந்தன. (இந்திய படையினர் கொண்டு சென்ற ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை).

நேருக்கு நேர் மோதல்:-

ஏற்கனவே இருந்த 50 வீரர்களுடன் கூடுதலாக விரைந்த 2-ம் அடுக்கு படையினரும் இணைந்துகொண்டனர். 200 சீன வீரர்கள் இருந்த நிலையில் இந்திய வீரர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் இருந்துள்ளனர்.

இரு தரப்பு வீரர்களும் கற்கலால் தாக்கியதுடன், ஆயுதங்கள் இன்றி கையால் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே காயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் 15 பேருக்கு காயம்:-

சீன வீரர்களுடான நேரடி மோதலில் இந்திய வீரர்கள் 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அதிக அளவிலான சீன வீரர்கள் காயம்:-

மோதலில் இந்திய வீரர்கள் 15 பேர் காயமடைந்த நிலையில் சீன வீரர்கள் அதிக அளவில் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கூடுதல் படையால் அதிர்ச்சி:-

50 வீரர்களாக இருந்த இந்திய படையில் 15 நிமிடங்களில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிந்ததால் சீன படையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய வீரர்கள் அதிக அளவில் இருந்ததால் மோதலில் சீன வீரர்கள் அதிகமானோருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்தையடுத்து சீன வீரர்கள் உடனடியாக பின்வாங்கியுள்ளனர்.

பேச்சுவார்த்தை:-

இந்த மோதலையடுத்து அப்பகுதியில் இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் எல்லைப்பகுதி பழைய மற்றும் சுமூக நிலைக்கு திரும்பியுள்ளனது. பின்னர், இந்திய - சீன வீரர்கள் தங்கள் பழைய நிலைக்கு திரும்பினர்.

மோதலுக்கான காரணம்:-

மோதல் நடைபெற்ற பகுதியில் சமீபத்தில் இந்திய தரப்பில் ராணுவ படைப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் நாங்கள் தான் வலிமை மிக்கவர்கள் என்ற மன உறுதி வலிமையை (morale superiority) வெளிக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சீன படையினர் எல்லைக்குள் முன்னேறி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2006-ம் ஆண்டு முதல் சர்ச்சை:-

தவாங் செக்டார் எல்லைப்பகுதியில் இந்தியா - சீனா இடையே எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுவதில் சர்ச்சை உள்ளது. இரு தரப்பும் தங்கள் எல்லையை வெவ்வேறு பகுதிகளாக வரையறுத்துள்ளதால் இந்த சர்ச்சை நிலவி வருகிறது. இதன் காரணமாக இப்பகுதில் இரு நாட்டு படைகளும் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story