மகாத்மா காந்தி வார்த்தைகளுக்கு மதிப்பு அளிக்காமல் கிராம மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு


மகாத்மா காந்தி வார்த்தைகளுக்கு மதிப்பு அளிக்காமல் கிராம மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x

மகாத்மா காந்தி வார்த்தைகளுக்கு மதிப்பு அளிக்காமல், கிராம மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

புதுமனை புகுவிழா

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பஞ்சாயத்துகள், தங்கள் பொருட்களையும், சேவைகளையும் அரசு இ-சந்தை மூலமாக வர்த்தகம் செய்யும் திட்டமும் அவற்றில் அடங்கும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 4 லட்சத்து 11 ஆயிரம் புதிய வீடுகளில் புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. அதில், காணொலி காட்சி மூலமாக பிரதமர் ேமாடி பங்கேற்றார்.

சொத்து அட்டை

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ், ரூ.7 ஆயிரத்து 853 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனால், 4 ஆயிரத்து 36 கிராமங்களை சேர்ந்த 9 லட்சத்து 48 ஆயிரம் குடும்பங்கள் பலன் அடையும். 'ஸ்வமிட்வா' திட்டத்தில், கிராமப்புறங்களில் சொத்துகளின் உரிமையாளர்களுக்கு சொத்துரிமையை நிலைநாட்ட உதவும் சொத்து அட்டைகளை பிரதமர் மோடி வழங்கினார். சுமார் 35 லட்சம் சொத்து அட்டைகளை அவர் ஒப்படைத்தார். நாடு முழுவதும் 1 கோடியே 25 லட்சம் சொத்து அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.2,300 கோடி ரெயில்வே திட்டங்கள்

ரூ.2 ஆயிரத்து 300 கோடி மதிப்புள்ள பல்வேறு ரெயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். குவாலியர் ரெயில் நிலைய மறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டினார். 3 புதிய ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சுதந்திரத்துக்கு பிறகு நீண்ட காலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, கிராமப்புற நம்பிக்கையை தகர்த்தது. கிராமப்புற சாலைகள், பள்ளிகள், மின்சாரம் அனைத்தும் அடிமட்டத்தில் இருந்தன. காங்கிரஸ் அரசு, கிராமங்களை ஓட்டு வங்கியாக கருதாததால், அவற்றுக்கு பணம் செலவழிக்க தயங்கியது. அப்படி புறக்கணித்த அந்த கட்சியை மக்களும் புறக்கணித்தனர்.

மகாத்மா காந்தி

சுதந்திரத்துக்கு முன்பு கூட பஞ்சாயத்து ராஜ் முறைக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ கிராம மக்களுக்கு துரோகம் செய்தது. இந்தியாவின் ஆன்மா, கிராமங்களில் இருப்பதாக மகாத்மா காந்தி கூறினார். ஆனால் அவரது வார்த்தைகளுக்கு காங்கிரஸ் மதிப்பு அளிக்கவில்லை.

வங்கிக்கணக்கு

ஆனால், பா.ஜனதா அரசு, இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கிராமங்களின் வளர்ச்சிக்கு கருவூலத்ைத திறந்துவிட்டது. பஞ்சாயத்துகளுக்கான மானியத்தை ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தியது. கிராமங்களில் 'ஜன்தன் யோஜனா' திட்டத்தின்கீழ், 40 கோடிக்கு மேற்பட்டோருக்கு வங்கிக்கணக்கு தொடங்க வைத்தது. முத்ரா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோருக்கு கடன் அளித்தது. கிராமப்புறங்களில் 3 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை, பெண்கள் பெயரில் அளிக்கப்பட்டதால், பெண்கள் சொத்து உரிமையாளர்களாக உயர்ந்துள்ளனர்.

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ், கிராமங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு இணையதள வசதிக்காக கண்ணாடி இழை பதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story