பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் முன் பாய்ந்த நபரால் பரபரப்பு


பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் முன் பாய்ந்த நபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Sep 2023 7:40 AM GMT (Updated: 24 Sep 2023 10:41 AM GMT)

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் முன் பாய்ந்த நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

வாரணாசி,

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி, கஞ்சாரி பகுதியில் முதல் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, துணை தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர், ரூ.1,115 கோடி மதிப்பிலான, தேவையாக உள்ள குழந்தைகளின் நலன்களுக்காக 16 உறைவிட பள்ளிகளும் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், கட்டுமான தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள் மற்றும் கொரோனா பரவலின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது, அவருடைய பாதுகாப்பு வாகனத்தின் முன்பு ஒரு நபர் குறுக்கே ஓடி சென்றார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, தனியாக அழைத்து சென்றனர்.

காஜிப்பூர் நகரை சேர்ந்த அவருடைய பெயர் கிருஷ்ண குமார் என்பதும், பா.ஜ.க. தொண்டர் என்றும் தெரிய வந்தது. பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனம் கடந்து செல்வதற்காக 1 மணிநேரம் வரை காத்திருந்துள்ளார். தன்னுடன் கோப்பு ஒன்றை வைத்திருந்த அவர், இந்திய ராணுவத்தில் சேரும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

அதற்கான உடலியல் தேர்வில் வெற்றி பெற்ற அவரால், மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து பலரை தொடர்பு கொண்டும் அதில் பலனில்லை. அதனால், தனது கோரிக்கையை பரிசீலிப்பதற்காக பிரதமரை தொடர்பு கொள்ள முயற்சித்து உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.


Next Story