நாடாளுமன்றத்தில் வண்ணப்புகைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் சிறிய பிரச்சினை; பாஜக எம்.எல்.ஏ. பேச்சு


நாடாளுமன்றத்தில் வண்ணப்புகைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் சிறிய பிரச்சினை; பாஜக எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2023 7:58 AM IST (Updated: 17 Dec 2023 8:09 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்திற்குள் வண்ணப்புகைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போபால்,

2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்த தாக்குதலின் 22வது நினைவு தினம் கடந்த 13ம் தேதி அனுசரிக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அதில், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின.

மக்களவையில் நண்பகல் 12 மணியளவில் அவை அலுவல்கள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தன. அப்போது, மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து திடீரென குதித்த 2 வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வண்ணப்புகைக்குண்டுகளை வீசினர். இதனால், நாடாளுமன்றம் மஞ்சள் நிற புகை மண்டலமாக மாறியது. இதனால், எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த 2 வாலிபர்களையும் எம்.பி.க்கள் பிடித்து பாதுகாப்புப்படையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அரங்கேறிய அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் 2 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வண்ணப்புகை குண்டுகளை வீசினர். அந்த பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் இதில் தொடர்புடைய 2 பேர் என மொத்தம் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக சபாநாயகர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வண்ணப்புகைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் சிறிய பிரச்சினை என்று மத்திய பிரதேச இந்தூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு சிறிய பிரச்சினை. காங்கிரஸ் எம்.பி. திக்ராஜ் ஷாகு விவகாரத்தை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை பெரிதாக்குகின்றன. காங்கிரஸ் எம்.பி. திக்ராஜ் ஷாகு வீட்டில் இருந்து கணக்கில் வராத 400 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட உண்மையை திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. திக்ராஜ் ஷாகு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை' என்று கூறினார்.


Next Story