ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்பு: நாளை கர்நாடகா செல்கிறார் சோனியா காந்தி


ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் பங்கேற்பு: நாளை கர்நாடகா செல்கிறார் சோனியா காந்தி
x

கோப்புப்படம்

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் பாதயாத்திரையில் வருகிற 6-ந் தேதி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மைசூரு,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் பாதயாத்திரையை கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது.

ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த 30-ந் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

கா்நாடகத்தில் 2 நாட்கள் பாதயாத்திரையை முடித்த ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தாண்டவபுரா கிராமத்தில் தங்கினார்.

நேற்று காலையில் ராகுல்காந்தி, காந்தி ஜெயந்தியையொட்டி நஞ்சன்கூடு தாலுகா பதனவாலு கிராமத்தில் உள்ள காதி கிரமோத்யோக் மையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்தியாவின் மகத்தான மகனை நினைவுகூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். காங்கிரஸ் யாத்திரையின் 25-வது நாளில் நாம் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளதால், எங்களது நினைவாற்றல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அகிம்சை, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நீதி என மகாத்மா காந்தியின் பாதையில் நடக்கிறோம்.

கன்னியாகுமரி முதல்காஷ்மீர் வரை 3,600 கி.மீ. தூரம் நம்முடன் பாதயாத்திரையாக வருபவர்களாக இருந்தாலும் சரி, குறுகிய காலத்துக்கு நம்முடன் நடந்து வரும் லட்சக்கணக்கான மக்களாக இருந்தாலும் சரி, இது சுயராஜ்ஜியத்தின் வெற்றியே. அச்சம், வெறுப்பு, பிரிவினை அரசியலுக்கு எதிராக இந்திய மக்களின் அமைதியான மற்றும் உறுதியான குரலாக இந்த பாதயாத்திரை உள்ளது.

ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளனர். காந்திஜி தனது உயிரை கொடுத்து காப்பாற்றிய அரசியலமைப்பு உரிமைகளுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்களில் பலர் நம்புகிறார்கள். மைசூருவில் இருந்து காஷ்மீர் வரையிலான பயணத்தை தொடரும்போது, இந்தியா முழுவதும் உள்ள எனது சக குடிமக்கள் அகிம்சை மற்றும் நல்லெண்ணம் என்ற உணர்வில் எங்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

இதையடுத்து பதனவாலு கிராமத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி, நேற்று மாலை மைசூரு நகருக்குள் நுழைந்தார். மைசூருவில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை மைசூருவில் இருந்து பாதயாத்திரையை தொடங்கி ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக மண்டியாவுக்கு செல்கிறார்.

சோனியா காந்தி வருகை

இந்த பாதயாத்திரையில் ஒரு நாள் மட்டும் கலந்துகொள்ள சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சோனியா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா வருகிறார்கள். அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரவுள்ளனர். வருகிற 6-ந் தேதி அவர்கள் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் அவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்று நடப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

அதற்கு முன்னதாககுடகில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அவர்கள் தங்குகிறார்கள்.

பாதயாத்திரைக்கு 2 நாட்கள் விடுமுறை என்பதால் ராகுல் காந்தியும் அந்த சொகுசு விடுதியில் தங்குவார். சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வருகையையொட்டி அவர்கள் தங்கவுள்ள விடுதி உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story