இந்தியா-வங்காளதேசம் இடையே மே 29 முதல் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடக்கம்..!
இந்தியா-வங்காளதேசம் இடையே மே 29 முதல் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்க உள்ளது.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே பயணிகள் ரெயில் சேவை வருகிற மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் கடந்த் 2020-ம் ஆண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் வங்காளதேச ரெயில்வே ரேக் மூலம் டாக்காவிலிருந்து கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் இந்திய ரெயில்வே ரேக் மூலம் கொல்கத்தாவிலிருந்து கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் வருகிற மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் என்.ஜே.பி-டாக்கா மிடாலி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை வருகிற ஜூன் 1 அன்று ரெயில் பவனில் இருந்து இந்தியா மற்றும் வங்காளதேச ரெயில்வே மந்திரிகளால் கொடியசைத்து தொடங்கப்படும். அப்போது வங்காளதேச ரெயில்வே மந்திரி இந்தியாவில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.