'இவரைப் போன்றவர்களுக்கு இந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லை' - ராமர் கோவில் பற்றிய சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி


இவரைப் போன்றவர்களுக்கு இந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லை - ராமர் கோவில் பற்றிய சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி
x
தினத்தந்தி 27 Dec 2023 4:51 PM GMT (Updated: 9 Jan 2024 9:36 AM GMT)

நமது கலாச்சாரத்தைப் பற்றி சாம் பிட்ரோடா போன்ற நபர்களுக்கு எதுவும் தெரியாது என்று சுஷில் மோடி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி முன்னிலையில், கோவில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது கவலை அளிக்கிறது. ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்வதை நான் கண்கூடாக பார்க்கிறேன். பிரதமரால் நாட்டில் நல்லது நடக்கும் என்று எல்லோரும் நினைப்பது கவலை அளிப்பதாக உள்ளது. நாம் தவறான திசையில் பயணிக்கிறோம் என்பதற்கான தகவல்கள் கிடைக்கின்றன.

ராமர் கோவில் மற்றும் ராம ஜென்மபூமி, தீபம் ஏற்றுதல் போன்ற விஷயங்களில் ஒட்டுமொத்த நாடும் அதீத ஆர்வம் காட்டும்போது, அது எனக்கு கவலையை ஏற்படுத்துகிறது. என்னைப் பொருத்தவரை, மதம் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். தேசிய பிரச்சினைகள் என்பது கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி, பொருளாதாரம், பணவீக்கம், சுகாதாரம், சுற்றுச்சூழல், மாசுபாடு. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷில் மோடி கூறுகையில், "சாம் பிட்ரோடாவைப் போன்ற நபர்களுக்கு இந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு வேலைவாய்ப்பைப் போலவே, கலாச்சாரமும், கடவுள் ராமரும் முக்கியமாகும். நமது கலாச்சாரத்தைப் பற்றி சாம் பிட்ரோடா போன்ற நபர்களுக்கு எதுவும் தெரியாது" என்று விமர்சித்தார்.

அதேபோல் மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறுகையில், "இவரைப் போன்ற நபர்களுக்கு கடவுள் ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் மட்டும்தான். இவர்கள் இந்த நாட்டில் இருந்தும், நாட்டின் நெறிமுறைகள் மற்றும் நன்மதிப்புகளில் இருந்தும் விலகி இருக்கிறார்கள். ஒருவேளை இவர்களுக்கு இந்த நாட்டுடன் தொடர்பு இருந்திருந்தால் ராமாயணம் பற்றியும், ராமராஜ்ஜியத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

மேலும் படையெடுப்பாளர்கள் எப்படி ராமர் கோவிலை இடித்தார்கள், இந்து மதத்தை அழிக்க முயற்சித்தார்கள், இந்துக்கள் எவ்வாறு பல நூற்றாண்டுகளாக தங்கள் நாகரீகத்தை பாதுகாத்து வந்தார்கள் என்பதை எல்லாம் இவரைப் போன்ற நபர்கள் அறிந்திருப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.


Next Story