மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; தேர்தலுக்கு தயார் - காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்


மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; தேர்தலுக்கு தயார் - காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்
x

சமூக, பொருளாதார நீதி, சமத்துவம் ஆகியவை குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி 2 நாள் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. கூட்டத்தின் முடிவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- விரைவில் நடைபெற உள்ள சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி, மக்களிடம் இருந்து உறுதியான தீர்ப்பை பெறும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி நம்பிக்கை தெரிவிக்கிறது.

வரவிருக்கும் தேர்தல்களை சந்திக்க காங்கிரஸ் முற்றிலும் தயாராக உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று நம்புகிறோம். சட்டம்-ஒழுங்கு, சுதந்திரம், சமூக, பொருளாதார நீதி, சமத்துவம் ஆகியவை குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் கூட்டத்தின் நிறைவில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தக்கூடாது, அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'இந்தியா' கூட்டணியை தேர்தலில் வெற்றி பெற வைக்க காங்கிரஸ் உறுதி பூண்டிருப்பதாக மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story