பா.ஜனதா ஆட்சியில் ஊழல்களால் மக்கள் விரக்தி; கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் - டி.கே. சிவக்குமார்


பா.ஜனதா ஆட்சியில் ஊழல்களால் மக்கள் விரக்தி; கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் - டி.கே. சிவக்குமார்
x

பா.ஜனதா ஆட்சியில் நடைபெறும் ஊழல்களால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சித்ரதுர்காவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஆதாயம் தேட முயற்சி

மாநிலத்தில் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி, அதன்மூலம் சட்டசபை தேர்தலில் ஆதாயம் தேடுவதற்கு பா.ஜனதாவினர் முயற்சிக்கின்றனர். தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சியில் காங்கிரசின் பங்கு மிகப்பெரியதாகும். அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தான் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை நடத்தி வருகிறார். எல்லா சமுதாயமும் தேசத்திற்காக சக்தி வாய்ந்த தலைவர்களை கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் அனைத்து தரப்பினரும் சமமானவர்கள், அனைவருக்கும் சம பங்கு, சம உரிமை என்பது தான் கொள்கையாக உள்ளது. தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி இருக்கும் அரசின் உத்தரவை நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? நியாயமான முறையில் இடஒதுக்கீடு கிடைக்குமா? என்பது குறித்து தான் அரசிடம் கேள்வி கேட்டு வருகிறோம்.

மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள்

காங்கிரஸ் கட்சி மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்றும் நினைத்ததில்லை. முன்பு மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும், அதற்கான திட்டங்கள் என்ன? என்பது பற்றி தான் சிந்தித்து திட்டங்களை வகுத்து வருகிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் எந்த அளவுக்கு ஊழல் நடக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சி மக்களிடம் ஒவ்வொன்றாக கொண்டு சேர்த்து வருகிறது. விதான சவுதாவை லஞ்சம் வாங்கும் இடமாக பா.ஜனதாவினர் மாற்றி வைத்துள்ளனர்.

பா.ஜனதா ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள் பற்றி மக்களும் அறிந்து வைத்துள்ளனர். ஊழல்களால் மக்கள் இந்த ஆட்சி மீது விரக்தியும் அடைந்துள்ளனர். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள். சங்கராந்திக்கு பின்பு மந்திரிகளின் ஆபாச வீடியோக்கள் வெளியாக இருப்பது பற்றி நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. தற்போது பா.ஜனதாவில் இருக்கும் 3 மந்திரிகளை, அவர்களே வைத்து கொள்ளட்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

1 More update

Next Story