லடாக்கில் ராகுல்காந்தி 'பைக் ரைட்' ... பாங்காங் ஏரி பகுதிக்கு செல்கிறார்...!
பாங்காங் ஏரிப்பகுதி உலகின் மிகவும் அழகான பகுதிகளில் ஒன்று என என் தந்தை கூறினார் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
லே,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று லடாக்கில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடினார்.
இந்நிலையில், ராகுல்காந்தி இன்று லடாக்கின் பாங்காங் ஏரிப்பகுதிக்கு செல்கிறார். லடாக்கில் இருந்து பைக்கில் பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி பாங்காங் ஏரிப்பகுதிக்கு செல்கிறார். சுற்றுலா தலமான பாங்காங் ஏரிப்பகுதிக்கு செல்லும் ராகுல்காந்தி அங்கு தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் (ஆக.20) வழிபாடு நடத்த உள்ளார்.
ராகுல்காந்தி பாங்காங் ஏரிப்பகுதிக்கு பைக்கில் செல்லும் புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பாங்காங் ஏரி சீன எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாங்காங் ஏரிப்பகுதியை மையமாக கொண்டு இந்தியா - சீன படைகள் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.