வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி நம் நாடு செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி


வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி நம் நாடு செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி
x

நமது ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு, அனைவரின் முயற்சியும் மிக முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 17வது இந்திய கூட்டுறவு மாநாடு துவங்கியது. சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.



அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "2014ஆம் ஆண்டுக்கு முன் விவசாயத் துறைக்காக 5 ஆண்டுகளில் ரூ.90,000 கோடி செலவழித்த நிலையில் இருந்து 3 மடங்கு தொகையை செலவிடும் பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற ஒரே திட்டமாக மாற்றியுள்ளோம்.

இப்போது, இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல், PM-KISAN திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் பலன்களைப் பெறுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில், 2.5 லட்சம் கோடி ரூபாய் நேரடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அவை சேர்க்கப்படும்.

டிஜிட்டல் இந்தியாவை அரசு ஊக்குவித்துள்ளது, இதன் மூலம் நேரடி பலன்கள் பயனாளிகளை நேரடியாக சென்றடையும். பண பரிவர்த்தனைகளை சார்ந்திருப்பதை அகற்றுவதே இதன் நோக்கமாகும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் ஆதிக்கம் நமது அடையாளமாக மாறியுள்ளது. உலகம், இது நமது கூட்டுறவுத் துறையிலும் இணைக்கப்பட வேண்டும்.

பால் பவுடரில் இருந்து வெண்ணெய் முதல் நெய் வரை நம் இந்திய விளைபொருட்களுக்கு உலகளவில் தேவை உள்ளது. நமது தினைகளுக்கு புதிய சந்தை உருவாகிறது. நமது சிறு விவசாயிகளுக்கு சம்பாதிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இது அமையும். உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு நாம் என்ற இலக்கை எட்டியுள்ளோம், அதற்கு பால் கூட்டுறவு சங்கங்களே காரணம்

இன்று 25,000க்கும் மேற்பட்ட கூட்டுறவுத் துறைகள் மீன்பிடித் துறையில் செயல்படுகின்றன. இது நமது மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, அவர்களின் வருவாய்த் திறனை மேம்படுத்துகிறது. கடந்த 9 வருடங்களில் உள்நாட்டு மீன்வளமும் 2 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி இன்று நம் நாடு செயல்பட்டு வருகிறது. நமது ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு, அனைவரின் முயற்சியும் மிக முக்கியம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக 17வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசுகையில், "நமது நாட்டில் கூட்டுறவு இயக்கம் தொடங்கி 115 ஆண்டுகள் ஆகிறது. சுதந்திரம் பெற்றதில் இருந்து கூட்டுறவுத்துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது, கூட்டுறவு அமைச்சகம் தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான். 2019-ல் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் ஒரு தனி கூட்டுறவு அமைச்சகத்தை அமைத்தார்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story