ரஷிய கூட்டமைப்பின் தலைவராக புதின் மீண்டும் தேர்வு: பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து


ரஷிய கூட்டமைப்பின் தலைவராக புதின் மீண்டும் தேர்வு: பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 March 2024 10:33 AM GMT (Updated: 20 March 2024 12:14 PM GMT)

ரஷியாவில் மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக தனது வாழ்த்துகளை புதினிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

ரஷியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் களமிறங்கினார். வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை. கிரெம்ளின் ஆதரவு வேட்பாளர்கள் 3 பேர் மட்டுமே புதினுக்கு எதிராக போட்டியிட அனுமதி கிடைத்தது. அவர்களும், உக்ரைன் மீது புதின் அரசாங்கம் நடத்தி வரும் போருக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் புதின் வெற்றி பெறுவது நிச்சயம் என்ற நிலை இருந்தது.

இதனையடுத்து தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 87.29 சதவீத வாக்குகள் பெற்று புதின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. மே மாதம் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த சூழலில் ரஷிய அதிபராக மீண்டும் தேர்வான விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு உரையாடினார். ரஷிய கூட்டமைப்பின் தலைவராக புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ரஷியாவின் நட்புறவான மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக தனது வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கு இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு விவகாரங்களில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர், மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இதனையடுத்து ரஷியா-உக்ரைன் மோதலைப் பற்றி விவாதிக்கும் போது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு ஆதரவான இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை முன்னோக்கி செல்லும் வழி என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story