உச்சி மாநாட்டை முன்னிட்டு 'ஜி-20 இந்தியா' செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்


உச்சி மாநாட்டை முன்னிட்டு ஜி-20 இந்தியா செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x

Image Courtesy : ANI

‘ஜி-20 இந்தியா’ செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர். ஜி-20 அமைப்பின் டெல்லி மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 'ஜி-20 இந்தியா' என்ற செயலியை வெளியிட்டுள்ளது. இந்த செயலியில் டெல்லி ஜி-20 மாநாடு குறித்த தகவல்கள், முக்கிய நிகழ்வுகள், செய்திகள் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'ஜி-20 இந்தியா' செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற மந்திரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது பிரதமர் இதனை தெரிவித்தார். இந்த செயலி வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் தடையின்றி தொடர்பு கொள்ள மந்திரிகளுக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story