சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி.!


சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி.!
x
தினத்தந்தி 23 Sept 2023 6:40 PM IST (Updated: 23 Sept 2023 6:42 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சேவைகள் 11 மாநிலங்களில் இணைப்பை ஏற்படுத்த உள்ளது.

1. உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூர் இடையே செல்லக்கூடியதாகும். இந்த வழித்தடத்தில் தற்போது இயக்கப்படும் அதிவேக ரெயிலை விட சுமார் 30 நிமிடங்கள் வேகத்தில் செல்லும். இது ராஜஸ்தானின் மூன்றாவது வந்தே பாரத் ரெயிலாகும்.

2. திருநெல்வேலி-மதுரை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய நகரங்களை சென்னையுடன் இணைக்கிறது. இது பயணிகளுக்கு விரைவான பயணத்தை வழங்க உள்ளது. இந்த ரெயில் சேவையால் பயண நேரம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் குறைய வாய்ப்புள்ளது. இந்த ரெயில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட நிறுத்தங்களுடன் சென்னையை வந்தடையும்.

3. ஐதராபாத்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஐதராபாத்தில் உள்ள கச்சிகுடா மற்றும் பெங்களூருவின் யஸ்வந்த்பூர் இடையே மகபூப்நகர், கர்னூல், அனந்தபூர் மற்றும் தரம்வரம் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில் 530 பயணிகள் அமரும் திறன் கொண்டதாக இருக்கும்.

4. விஜயவாடா - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இந்த வந்தேபாரத் ரெயில் ரேணிகுண்டா வழித்தடத்தில் திருப்பதிக்கு இணைப்பை வழங்கும். இது விஜயவாடா மற்றும் சென்னை இடையே தெனாலி, ஓங்கோல், நெல்லூர் மற்றும் ஆந்திராவின் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.

5. பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இந்த ரெயிலானட்ஜி பீகாரில் உள்ள பாட்னா சந்திப்பை மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுராவுடன் இணைக்கும். மொத்தமுள்ள 532 கிமீ தூரத்தை 6 மணி 35 நிமிடங்களில் கடக்கும். இந்த ரெயில் பாட்னா சாஹேப், மொகாமா, லக்கீசராய் சந்திப்பு, ஜசிதி, ஜம்தாரா, அசன்சோல் மற்றும் துர்காபூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

6. காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கேரளாவின் இரண்டாவது வந்தே பாரத் ரெயிலாகும். இது பயண நேரத்தை சுமார் மூன்று மணிநேரம் குறைத்து 573 கிலோமீட்டரை ஏழு மணி 55 நிமிடங்களில் கடக்கும்.

7. ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

இந்த ரெயில் ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12:45 மணிக்கு ரூர்கேலா சென்றடையும். மறு மார்க்கமாக ரெயில் ரூர்கேலாவில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு பூரியை சென்றடையும். இது குர்தா சாலை, புவனேஸ்வர், கட்டாக், தேன்கனல், அங்குல், சம்பல்பூர் நகரம் மற்றும் ஜார்சுகுடா ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

8. ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் செவ்வாய் தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகரங்களை இணைக்கும் அதிவேக ரெயிலாக இது இருக்கும். ராஞ்சியில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:20 மணிக்கு ஹவுரா சென்றடையும். மறு மார்க்கமாக, ஹவுராவில் இருந்து பிற்பகல் 3:45 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் ராஞ்சியை இரவு 10:50 மணிக்கு வந்தடையும். இது முரி, கோட்ஷிலா, புருலியா, சந்தில், டாடாநகர் மற்றும் காரக்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

9. ஜாம்நகர்-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ஜாம்நகர்-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 331 கிமீ தூரத்தை 4 மணி நேரம் 40 நிமிடங்களில் ஐந்து நிறுத்தங்களுடன் கடக்கும். இது ஜாம்நகரில் இருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட்டு ராஜ்கோட், வான்கனேர், சுரேந்திரநகர், விராம்கம் மற்றும் சபர்மதி வழியாக அகமதாபாத்திற்கு காலை 10:10 மணிக்கு சென்றடையும்.


Next Story