தீபாவளியையொட்டி நாளை மறுநாள் பிரதமர் மோடி அயோத்தியாவுக்கு பயணம்
தீபாவளியை முன்னிட்டு வரும் 23-ந் தேதி அயோத்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு வரும் 23-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பகவான் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரத்தை அவர் ஆய்வு செய்கிறார். பின்னர் பகவான் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை பிரதமர் மேற்கொள்கிறார். சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிடுகிறார். பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையம் அவர் தொடங்கிவைக்கிறார்.
இந்த ஆண்டு தீப உற்சவத்தின் 6-வது பதிப்பு நடைபெறுகிறது. முதல் முதலாக பிரதமர் இதில் நேரடியாக கலந்து கொள்கிறார். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் இந்த நிகழ்ச்சியில் ஏற்றப்படும். தீப உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு நடன வடிவிலான 11 ராம்லீலா மற்றும் 5 அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம்பெறும். சரயு நதியில் கரைகளில் பிரம்மாண்டமான இசை லேசர் காட்சிகளுடன் முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.