பிரதமரின் தாயாருக்கு 100-வது பிறந்தநாள் - பாத பூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி


பிரதமரின் தாயாருக்கு 100-வது பிறந்தநாள் - பாத பூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர் மோடி
x

தனது தாயாரின் 100-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பாத பூஜை செய்து பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார். மண் வீட்டில் தனது தாயாருடன் இருந்ததை குறிப்பிட்டு நெகிழ்ச்சியான பதிவினையும் மோடி வெளியிட்டுள்ளார்.

பாத பூஜை

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் 100-வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

குஜராத் மாநிலம், காந்திநகரையொட்டி அமைந்துள்ள ரேசான் கிராமத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் தற்போது அவர் வசித்து வருகிறார்.

தாயாரின் 100-வது பிறந்த நாளில் அவரை நேரில் சந்தித்து ஆசி பெறுவதற்காக பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு அங்கு சென்றார். ஏறத்தாழ ஒரு மணி நேரத்தை அவர் தனது தாயுடன் கழித்தார். அப்போது தாயாருக்கு அவர் பாத பூஜை செய்து வணங்கி ஆசி பெற்றார்.

மண் சுவர், ஓட்டு கூரை

தனது தாயாரின் பிறந்தநாளையொட்டி அவருடைய தியாகத்தை மெச்சும் வகையிலும், பசுமரத்தாணி போல பதிந்த கடந்த கால நினைவுகளையும் மோடி தனது வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார். அதில் தனது தாயார் உடன் பல்வேறு தருணங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இடம் பெறச்செய்துள்ளார்.

அந்தப் பதிவில் பிரதமர் மோடி எழுதி இருப்பதாவது:-

'அம்மா' என்ற வார்த்தைக்கு இணையான வேறு சொல்லை அகராதியில் காணமுடியாது. எனது தாயார் ஹீராபாய் தனது 100-வது வயதில் அடியெடுத்து வைப்பதை பகிர்ந்துகொள்ளும் நல்வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளதை மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன்.

எனது தந்தை உயிருடன் இருந்திருந்தால் அவரும் 100-வது பிறந்த நாளை கடந்த வாரம் கொண்டாடியிருப்பார். வத் நகரில் எங்கள் குடும்பம் ஒரு ஜன்னல் கூட இல்லாத சிறிய வீட்டில் வசித்தது. கழிவறை அல்லது குளியல் அறை என்பது எங்களுக்கு ஆடம்பரமான ஒன்றாகும். மண் சுவரும், ஓட்டு கூரையும் கொண்ட இந்த ஒரு அறை குடியிருப்பை நாங்கள் எங்கள் வீடு என்று அழைத்தோம்.

எனது பெற்றோர், என் உடன்பிறந்தவர்கள் மற்றும் நான் உள்பட அனைவரும் அதில்தான் தங்கியிருந்தோம். அம்மா வீட்டு செலவுகளை சமாளிக்க ஒரு சில வீடுகளில் பாத்திரங்களை கழுவுவது வழக்கம். மழைக்காலங்களில், எங்கள் வீட்டின் கூரை ஒழுகி, வீடு வெள்ளக்காடாகிவிடும். மழைநீரை சேகரிக்க, ஒழுகல் உள்ள இடங்களின்கீழ், வாளிகளையும், பாத்திரங்களையும் அம்மா வைப்பார். இந்த மோசமான சூழலிலும் அமைதியின் சின்னமாக அம்மா இருப்பார். இந்த தண்ணீரை அடுத்த சில நாட்களுக்கு அவர் பயன்படுத்திக்கொள்வார். தண்ணீர் சேமிப்புக்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் எதுவாக இருக்கமுடியும்?

அன்னையின் ஆசி

மற்றவர்கள் மகிழ்வதைக் கண்டு அம்மா மகிழ்வார். எங்களது வீடு சிறியதாக இருந்தாலும், அவர் பரந்த சுபாவம் கொண்டவர். எனது தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராவிதமாக காலமானதும், அவருடைய மகனான அப்பாஸை எங்களது வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் எங்களது வீட்டில் தங்கி அவருடைய படிப்பை முடித்தார். எனது சகோதர-சகோதரிகள் மீது காட்டுவதைப்போன்றே அம்மா, அப்பாசிடமும் பாசம் காட்டி அவரை கவனித்துக்கொண்டார். ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையின் போது, அப்பாசுக்கு பிடித்த திண்பண்டங்களை அம்மா செய்து கொடுப்பார்.

என் அம்மாவுக்கு எந்த சொத்துகளும் இல்லை. என் அம்மா தங்கம் அணிந்திருப்பதையும் நான் பார்க்கவில்லை. என் அம்மா எப்போதும், எதன் மீதும் ஆசைப்பட்டதுமில்லை. என் அம்மா இப்போதும் ஒரு சிறு அறையில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நான் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் என்னுடைய அன்னையின் ஆசி எப்போதும் என்னை பின்தொடர்கிறது. டெல்லிக்கு இடம் பெயர்ந்த பிறகு என் அன்னையுடனான சந்திப்பு முன்பிருந்ததை விட மிகவும் குறைந்தது. ஆனால் அவருடைய ஆசீர்வாதங்களைப்போல அவரது அன்பும், பாசமும் மாறாமல் நிலைத்திருக்கின்றன.

தவ வாழ்க்கை, தியாகம்

எனது பெற்றோர்களின் வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது அவர்களது நேர்மையும், சுயமரியாதையும் அவர்களின் மிகப்பெரும் பண்புகளாக இருந்திருக்கின்றன. எந்த சவாலையும் எதிர்கொள்ள அவர்கள் கற்றுவைத்திருந்த ஒரே மந்திரம் கடின உழைப்பு, தொடர் கடின உழைப்பு. எனது தந்தை எப்போதும் யாருக்கும் சுமையாக மாறவே இல்லை. எனது தாயாரும் அப்படியே. தனது பணிகளை முடிந்தவரை அவரே செய்துகொள்ள முயற்சிக்கிறார். என் அன்னையின் வாழ்க்கையை காணும் போது அவரது தவ வாழ்க்கை, தியாகங்கள் மற்றும் இந்தியாவின் தாய்மை குணம் ஆகியவற்றை உணர்கிறேன். எப்போதெல்லாம் என் அன்னையையும், கோடிக்கணக்கான அவரைப்போன்ற பெண்மணிகளையும் காணும்போது, இந்திய மகளிரால் ஆகாதது என்று எதுவுமில்லை என்று உணரத்தோன்றுகிறது.

ஒவ்வொரு வறுமை கதைக்கு பின்னாலும், ஒரு அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு சவாலுக்கும் பின்னே ஒரு அன்னையின் உறுதியான முடிவு ஒளிந்திருக்கிறது.

அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

அம்மா, உங்களுக்கு மிக மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள். 100-வது பிறந்தநாளை கொண்டாடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைப்பற்றி விரிவாக பொதுவெளியில் எழுதும் துணிச்சல் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. அம்மா உங்களது ஆரோக்கியமும், நலனும் சிறந்திருக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன். எங்களது அனைவருக்கும் உங்களது ஆசிர்வாதங்களை வேண்டி நிற்கிறேன். உங்கள் காலடியில் தலைவணங்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story