அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை


அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:46 PM GMT)

பெங்களூருவில் முழு அடைப்பையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் முழு அடைப்பையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தயானந்த் எச்சரித்துள்ளார்.

போலீஸ் கமிஷனர் ஆலோசனை

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து, முழு அடைப்பையொட்டி முன் எச்சரிக்கையாக எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆலோசனை நடத்தினார்.

இதில், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் சதீஸ்குமார், ரமன்குப்தா, இணை போலீஸ் கமிஷனர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முழு அடைப்பின் போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகளை பலப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முக்கிய பகுதிகளில்...

குறிப்பாக மைசூரு ரோடு, பேடராயனபுரா, சாட்டிலைட் பஸ் நிலையம், சாந்திநகர், அல்சூர் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் போலீஸ் கமிஷனர் தயானந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூருவில் நடைபெற உள்ள முழு அடைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள அனைத்து துணை போலீஸ் கமிஷனர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் நகரில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாளை (அதாவது இன்று) கண்டிப்பாக பணிக்கு வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு பணியில் 3 கம்பெனி அதிவிரைவு படையினர் ஈடுபட உள்ளனர். இதுதவிர 60 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை மற்றும் நகர ஆயுதப்படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பெங்களூருவில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் அந்தந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பாரபட்சம் இன்றி நடவடிக்கை

பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறிய அசம்பாவிதங்கள் கூட நடைபெறாத வண்ணம் பாதுகாப்பை பலப்படுத்தும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு அடைப்பை காரணம் காட்டி நகரில் திறந்திருக்கும் கடைகளை அடைக்கும்படி கூறினாலோ, கடைகளை போராட்டக்காரர்களே அடைத்தாலோ, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story