பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகனுக்கு 16-ந் தேதி வரை போலீஸ் காவல்
ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகனை வருகிற 16-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகனை வருகிற 16-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எம்.எல்.ஏ. மகன் கைது
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் குடிநீர்-வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றினார். இந்த நிலையில், மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய டெண்டர் வழங்கும் விவகாரத்தில் கடந்த 2-ந் தேதி பெங்களூருவில் உள்ள தன்னுடைய தந்தையின் அலுவலகத்தில வைத்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லோக் அயுக்தா போலீசாரால் பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அந்த அலுவலகம், பிரசாந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7.72 கோடி சிக்கி இருந்தது. பிரசாந்துடன், அவரது உறவினர் சித்தேஷ், சுரேந்திரா, நிகோலஸ், கங்காதர் ஆகிய 4 பேரையும் லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த லஞ்ச விவகாரத்தில் எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
16-ந் தேதி வரை காவல்
இதையடுத்து, லஞ்ச வழக்கில் முதல் குற்றவாளியாக மாடால் விருபாக்ஷப்பா சேர்க்கப்பட்டார். போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுள்ளார். மேலும் லோக் அயுக்தா போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகன் வீட்டில் சிக்கிய பணத்திற்கும், ரூ.40 லட்சம் லஞ்சத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.
இதையடுத்து, பிரசாந்த் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் லோக் அயுக்தா போலீசார் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் வந்தது. அப்போது பிரசாந்த் உள்பட 5 பேரையும் வருகிற 16-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க லோக்அயுக்தா போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
பிரசாந்திடம் தீவிர விசாரணை
அதைத்தொடர்ந்து, பிரசாந்த் உள்பட 5 பேரையும் லோக் அயுக்தா போலீசார் தங்களது வசம் எடுத்து விசாரணையை தொடங்கி உள்ளனர். லஞ்ச பணம் ரூ.40 லட்சம் குறித்தும், வீட்டில் சிக்கிய ரூ.6 கோடி குறித்தும் பிரசாந்திடம் லோக் அயுக்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக லஞ்ச விவகாரத்தில் மாடால் விருபாக்ஷப்பாவுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் பிரசாந்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக மாடால் விருபாக்ஷப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கவும் லோக் அயுக்தா போலீசார் முடிவு செய்துள்ளனர்.