காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் காவல் அதிகாரி மரணம்; ஐ.ஜி. மலர்வளையம் வைத்து அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த காவல் அதிகாரிக்கு ஐ.ஜி. மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் லால் பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போலீசாரின் வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் என நேற்று (செவ்வாய் கிழமை) துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 3 போலீசார் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த காவல் அதிகாரி முஷ்டாக் அகமதுவுக்கு காஷ்மீர் மண்டல ஐ.ஜி. விஜய் குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மற்ற போலீசாரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி., எங்களது தைரியம் நிறைந்த காவல் அதிகாரி முஷ்டாக் அகமதுவின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதிகள் தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த கோழைத்தனம் வாய்ந்த இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கொடூர செயலை செய்த நபர்கள் விரைவில் நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.