துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.76 லட்சம் லஞ்சம் கொடுத்தேன்; ருத்ரேகவுடா பட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு


துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.76 லட்சம் லஞ்சம் கொடுத்தேன்; ருத்ரேகவுடா பட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு
x

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.76 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக, இவ்வழக்கில் கைதான ருத்ரேகவுடா பட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.76 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக, இவ்வழக்கில் கைதான ருத்ரேகவுடா பட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ருத்ரேகவுடா பட்டீல்

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதில் முறைகேடு நடந்தது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கலபுரகியை சேர்ந்த ருத்ரேகவுடா பட்டீலை, சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தலைமறைவானார். பின்னர் கலபுரகி கோர்ட்டில் ருத்ரேகவுடா பட்டீல் சரண் அடைந்தார். தற்போது அவர் கலபுரகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இவ்வழக்கில் இருந்து தப்பிக்க ரூ.76 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக ருத்ரேகவுடா பட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக முகநூலில் வெளியாகி உள்ள வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-

ரூ.76 லட்சம் லஞ்சம்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க என்னிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரேகவுடா ரூ.3 கோடி லஞ்சம் கேட்டார். நான் ரூ.76 லட்சம் லஞ்சம் கொடுத்தேன். அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளது. இந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீதிப்பணத்தை கொடுக்கும்படி சங்கரேகவுடா வலியுறுத்தினார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி இருந்தார்.

ஆனால் ருத்ரேகவுடா பட்டீலின் குற்றச்சாட்டை, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரேகவுடா மறுத்துள்ளார். நான் ருத்ரேகவுடாவை கடந்த ஆண்டு(2022) ஜூன் மாதத்திற்கு பின்பு பார்த்தது கூட இல்லை. இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்புவதற்கு அவர் முயற்சிக்கிறார் என்று சங்கரேகவுடா தெரிவித்துள்ளார்.


Next Story